Labels

Tuesday, June 7, 2016

வாழ்வியல் ஒழுக்க நெறிகளை போதிக்கும் தாலாட்டுப் பாடல்கள் அழிந்து வரும் அவலம் ஆவணப்படுத்தி ஒலிபரப்புகிறதும் மதுரை வானொலிநாட்டார் பாடல் வகைகளில் ஒன்றான தாலாட்டு பாடல்கள் வாய்மொழி இலக்கியங்களில் ஒன்றாகும். "தால்" என்பது நாவைக் குறிக்கும். நாவினால் ஆட்டி ரா ரா ரா ரா, லு லு லு லு என்று ஓசை எழுப்பி குழந்தையை உறங்க வைப்பதால்  தாலாட்டுதல் பின்னர் தாலாட்டு என மருவியது.

தாலாட்டுப் பாடலின் தொடக்கத்தில் இடம் பெறும் ஒலிக்குறிப்புச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆராட்டு, ரோராட்டு,  ஓராட்டு, தாராட்டு, தொட்டிப் பாட்டு, தூரிப்பாட்டு என்று  வகைப்படுத்தப்படுகின்றன. 

தமிழகத்தில் தாலாட்டுப் பாடல்கள் அனைத்து சமயம் மற்ம் சாதி மக்களிடமும் வழக்கத்தில் உள்ளதே என்பது இப்பாடல் வடிவத்தின் சிறப்பாகும். தாலாட்டினை குழந்தையின் தாய் மட்டும் அல்லாமல் குழந்தையின் பாட்டி, அத்தை, மூத்த சகோதரி போன்ற உறவினர்களும் தாலாட்டுப் பாடுவர். பெண்கள் வாய்மொழி இலக்கியமாகத் திகழும் தாலாட்டினை ஆண்களும் பாடுவது அரிதாகும்.


19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து சிறு சிறு தாலாட்டுப் பாடல்களின் தொகுப்பு  நூல்கள் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இதனால் நாட்டார் பாடல் வகைகளில் தாலாட்டுப் பாடல்களில் எழுத்திலக்கியத்தின் தாக்கம் மிகுதியாகப் பெற்ற இலக்கியமாகத் திகழ்கின்றது. 

தாலாட்டுப் பாடல்களின் இயல்புகள்

குழந்தைகளை உறங்க வைப்பதற்காகப் பாடப்பட்டாலும். வாழ்வியல் ஒழுக்க நெறிகளையும், முன்னோர்களின் வாழ்க்கைமுறை மற்றும் உறவுமுறைகளையும் பிஞ்சிலேயே மனதில் விதைக்கும் வலிமை கொண்டது தாலாட்டு. குழந்தையைப் பற்றிய தாயின் எதிர்பார்ப்புகளும், கனவுகள், தாய்மாமன் புகழ் இதில அதிகம்  காணப்படுவதுண்டு. அழுத குழந்தையைச் சிரிக்க வைக்க, விளையாட்டு காட்ட, பேசுவதற்கு, நாப்பயிற்சி அளிக்க என குழந்தைகள்  வளரும் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப தனித்தன்மையுடன் தாலாட்டுப் பாடல்கள் பாடப்படுவது உண்டு.பாரம்பரியமாக செவி வழியாக வாழ்ந்து வந்த தாலாட்டு பாடல்கள் இன்றைய தலைமுறைகளின் சினிமா மோகத்தினால் மெல்ல மெல்ல அழிந்து வருகின்றனது. இந்நிலையில் அகில இந்திய வானொலியின் மதுரை நிலையம் தாலாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்தும அளப்பரிய பணியை மேற்கொண்டுள்ளது.


 இது குறித்து மதுரை வானொலியின் நிகழ்ச்சி பொறுப்பாளர் சவித்ரா ராஜாராம் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

அகில இந்திய வானொலியின் மதுரை நிலையத்திற்குட்பட்ட ஒலிபரப்பு எல்லைக்குள் இருக்கும்  6 மாவட்டங்களில் பாடப்படும் பாரம்பரிய பாடல்களின் ஒலிப்பதிவுகளை ஆவணத்தொகுப்பாக்கி பாதுகாத்திடும் முனைப்போடு களம் இறங்கியது மதுரை வானாலி. 

முதற்கட்டமக அழிவு நிலையில் இருக்கும் "தாலாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்த ஆயத்தமாகி ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய ஆறு மாவட்டங்களில் பல்வேறு சமுதாய மக்களை அணுகி 113 பாடல்கள் பதிவு செய்யப்பட்டது. பெரும்பாலும் 55 வயதை கடந்த மூத்த தலைமுறையினர் மட்டுமே தாலாட்டுப் பாடல்களை பாடினார்கள். இரண்டாம் தலைமுறைக்கு (அம்மா,அப்பா) தாலாட்டுப் பாடல்களைப் பாடத்தெரியவில்லை.  தற்போது மூன்றாம் தலைமுறையினருக்கு (பேரன்,பேத்தி) தாலாட்டுப் பாடல்களைப் பாடி உறங்க வைப்பது வழக்கத்தில் இல்லை எனவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

பதிவு செய்யப்பட்ட தாலாட்டுப் பாடல்களை நேயர்களுக்காக தற்போது தொகுத்து வழங்க உள்ளோம். மதுரை வானொலியில்.செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு "ஊரகக் கலையரங்கம்" நிகழ்ச்சியில் தாலாட்டுப் பாடல்கள் ஒளிபரப்படும். மதுரை வானொலியின் ஒலிபரப்பு நிர்வாகி கார்த்திகை தீபன் பாடல்களை ஒலிப்பதிவு செய்தார், என்றார்.

ஆவணப்படுததும் பணிக்காக மதுரை வானொலியை வாழ்த்தும் சமூக ஆர்வலர்கள், தாலாட்டு வழக்கொழிந்து போவதை தடுக்க தற்போதைய தலைமுறை தம்பதிகளும் குழந்தைகளுக்கான பாடல்களைப் பாட வேண்டும். இதனால் எத்தனை தலைமுறைகள் வந்தாலும் தாலாட்டுப் பாடல் தனித்துவமாக விளக்கும் என கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தி இந்து 07.06.2016

1 comment:

கோமதி அரசு said...

நல்ல முயற்சி.
மதுரை வானொலி சேவைக்கு வாழ்த்துக்கள்.

Post a Comment