Labels

Monday, November 4, 2013

நரிக்குறவர்களின் நலம் நாடும் நல்லாசிரியர் உதயகுமார்


ஒரு இயக்கம் செய்ய வேண்டிய காரியத்தை 25 வருடங்களாக தனி மனிதனாகச் செய்து கொண்டிருக்கிறார் நல்லாசிரியர் விருதுக்குச் சொந்தக்காரரான உதயகுமார்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடா னையை ஒட்டியுள்ளது பண்ணவயல் கிராமம். இங்குள்ள சமத்துவபுரத்தில் குடியிருக்கும் நரிக்குறவர்கள், உதயகுமாரை தோளில் தூக்காத குறையாக கொண்டாடுகிறார்கள். சில வருடங்களாக அந்த மக்களுக்கு இவர்தான் காட் ஃபாதர்.


அவரைச் சந்திக்க திருவாடானை சென்றேன்.  பஸ் நிலையத்தில் இறங்கி செல்போனில் தொடர்பு கொண்டபோது, தாலுகா அலுவலகத்தில் இருப்பதாகச் சொன்னார். அங்கு சென்றபோது, அலுவலக வாசலில் இருக்கும் அரச மரக் கன்றுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தார். இங்கு மட்டுமல்ல.. திருவாடானை தாலுகா வட்டாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலமரம் மற்றும் அரச மரக் கன்றுகளை நட்டும் அவற்றை பிள்ளைகள்போல் பராமரித்தும் வருகிறாராம் உதயகுமார்.

“ஏதோ பிறந்தோம்.. வாழ்ந்தோம்.. இறந்தோம் என்று இல்லாமல் வாழும் காலத்தில் எதைச் சாதித்தோம் என்ற கேள்வி நமக்குள் இருக்க வேண்டும். மற்ற உயிரினங்கள் தன் இனத்துக்காக செய்ய முடியாததை மனிதன் மட்டுமே செய்ய முடியும். அது கல்வி, பொருளாதாரம், உடல் உழைப்பு என்று எந்த வழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏழை, எளியவர்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்ய வேண்டும் என நினைத்தேன். அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்”... தத்துவார்த்த மான வார்த்தைகளுடன் பேச்சைத் தொடங்கினார்.

பண்ணவயல் நரிக்குறவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் வாழ்க்கை முறையையும் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மற்றவர்களைப் போல இவர்களுக்கும் சம வாய்ப்புகள் அளிக்கப்பட்டால் இவர்களில்கூட ஒரு கலெக்டரை உருவாக்க முடியும். இதை மனதில் வைத்துதான் இந்த மக்களை நெருங்க ஆரம்பித்தேன். திருவாடானை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தபோது, இங்குள்ள ஒரே ஒரு நரிக்குறவர் குழந்தையை பள்ளியில் சேர்த்தேன். அதற்கு நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சநஞ்சமில்லை. அதற்காக பின்வாங்கவில்லை. தொடர்ந்து அந்த மக்களிடம் பேசிப் பேசி, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொன்னேன். பல குழந்தைகளை பள்ளிக்கூடத்துப் பக்கம் திருப்பினேன். இப்போது, 56 குழந்தைகள் திருவாடானை சமத்துவபுரம் அன்பாலயா உறைவிடப் பள்ளியில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தில் படிக்கிறார்கள்.தங்கள் குழந்தைகளை முறையாக தமிழ் பேசவும் எழுதவும் படிக்கவும் வைத்திருப்பதால் என்னை அந்த மக்கள் நம்புகின்றனர். அவர்கள் இல்லங்களில் நடக்கும் சுக, துக்கங்களில் என்னையும் 
மறக்காமல் சேர்த்துக் கொள்கிறார்கள்…

பேசியபடியே பண்ணவயல் சமத்துவபுரத்துக்கு அழைத்துச் சென்றார்.

உதயகுமாரின் தலையைப் பார்த்ததுமே அங்கிருந்த நரிக்குறவ மக்கள், ‘சார்.. சார்..’ என்று அவரை மொய்த்துவிட்டார்கள். அவர்களை அமைதிப்படுத்திவிட்டு பேச்சைத் தொடர்ந்தார்.

இவங்களோட நாகரிகமில்லாத நிலை, உடல் துர்நாற்றம், சுத்தமில்லாத ஆடை போன்றவை ஆரம்பத்தில் எனக்கும் குமட்டத்தான் செய்தது. ஆனால், நாளடைவில் பழகிப்போச்சு. நாகரிகம்னா என்ன, சுத்தபத்தம்னா என்னன்னு இவங்களுக்கு இன்னமும் சொல்லிக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கிறேன். திருவாடானையில் உள்ள ஆதிரத்தினேஸ்வரர் கோயில் தேவாரமும் திருவாசகமும் பாடிய திருத்தலம். அதனால், ஆண்டுதோறும் கோயில் விழாக்களில் நரிக்குறவர் மாணவர்களை தேவாரமும் திருவாசகமும் பாடவைக்கிறேன்.

என்னதான் பாடமா படிச்சாலும் இந்தக் குழந்தைகள் ஏழாம் வகுப்புக்கு மேல படிக்க மாட்டேங்குறாங்க. காரணம் இவங்களுக்குள்ள இருக்கிற குழந்தைத் திருமண முறைகள். இன்னொன்று இவர்களின் பொருளாதார நிலைமை. இந்த நிலையையும் மாற்றுவதற்கான முயற்சியில் இறங்கி இருக்கேன். என் ஆயுளுக்குள் இந்தக் குழந்தைகள்ல யாராச்சும் ஒருத்தரையாவது கல்லூரியில் சேர்த்து படிக்க வைச்சிடணும். அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நரிக்குறவர் வீட்டுக் குழந்தையா பிறக்கணும். இதுதான் எனக்கிருக்கிற ஆசை… கண்கள் பணிக்கச் சொன்னார் உதயகுமார்.

நன்றி: தி இந்து 04.11.2013


No comments:

Post a Comment