Labels

Monday, November 2, 2015

அழிந்து வரும் நாட்டுப்புறக் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியைகள்





தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க நாட்டுப்புறக் கலைகள் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக செழித்து வளர்ந்ததை சங்க இலக்கியத்திலிருந்து இன்றுள்ள இலக்கியங்கள் வரையிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இன்றைய நவின ஊடகங்களின் தாக்கத்தால் நாட்டுப்புறக் கலைகள் மெல்ல  மெல்ல அழிந்து வருகின்றன.

இந்நிலையில் ாமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியைகளாகப் பணிபுரிந்து வரும்  தமயந்தியும், கிருஷ்ணவேணியும் தாம் பணியாற்றும் பள்ளி மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளை பயிற்றுவித்து அதன் மூலம் சமுக விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் பலவிதமான நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்


மாற்றுத் திறனாளிகள்

இடைநிலை தமிழ் ஆசிரியையாக பணிபுரியும் தமயந்தி கால் ஊனம் உள்ள மாற்றுத்திறனாளி, பட்டதாரி தமிழ் ஆசிரியையான கிருஷ்ணவேணி பிறவியிலேயே பார்வையை இழந்தவர் என்பது   இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம்.

மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் கற்றுக் கொடுப்பது குறித்து தமயந்தி தி இந்து  கூறியதாவது,
''ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே உள்ள களக்குடி தான் எனக்கு பூர்வீகம். எனது தந்தை ஒரு கூத்துக் கலைஞர். அவரிடம் இருந்து தான் நாட்டுப்புறக் கலைகளை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொண்டேன். ஆனாலும் நான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் பள்ளி நாட்களில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நான் அனுமதிக்கப்படவில்லை.

ஆசிரியர் பணியில் சேர்ந்த பின்னர் அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் மீது இயல்பாகவே ஆர்வம் இருப்பதை அறிந்து கொண்டேன். ஆர்வமுள்ள மாணவர்களை தேர்வு செய்து வில்லுப்பாட்டு, கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பம் உள்ளிட்ட நாட்டுப்புறக் கலைகளை கற்றுக் கொடுத்தோம்.

நாட்டுப்புறக் கலைகளை ஆர்வத்துடன் கற்றுக் கொண்ட மாணவர்கள் ஆரம்பத்தில்  ஆசிரியர் தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டுப்புற கலைகள் மூலமாக புத்தகம் வாசிப்பு, மரம் வளர்ப்பு, ஹெல்மெட் பாதுகாப்பு என விழிப்புணர்வு ஏற்படுத்தத் துவங்கினர். இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு நிகழ்வுகளில் கலை நிகழ்ச்சி நடைபெற்றால் எங்கள் மாணவர்கள் கண்டிப்பாக அங்கிருப்பபார்கள், என்றார்.


பயிற்சி அளிப்பது எளிது 

ஆசிரியை தமயந்தி விட்ட இடத்திலிருந்து ஆசிரியை கிருஷ்ணவேணி மேலும் தொடர்ந்தார்,

பிறவியிலேயே பார்வையை இழந்ததால் பள்ளி, கல்லூரி நாட்களில் கவிதை, பேச்சுப்போட்டி, பாடல்கள் எழுதுவது என போட்டிகளில் பங்கேற்று எனக்குள்ள பேச்சு மற்றும் எழுத்து திறமையை வெளிக்காட்டி வந்தேன். இவை ஆசிரியர் பணியில் சேர்ந்து திருப்புல்லாணிக்கு வந்ததும்  பள்ளியில் நாட்டுப்புற கலைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது எளிதாக இருந்தது.

நாட்டுப்புறக் கலைகளை பள்ளி மாணவர்கள் கற்றுக் கொள்வதன் மூலம் அவர்களின் சிந்தனைத் திறனும், கல்வித் திறனும் மிக வேகமாக வளர்ச்சி அடைகிறது. மேலும் இன்றைக்கு மாணவர்களுக்கு அடிப்படை தேவையான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்க்கை  கல்வியையும் நாட்டுப்புறக் கலைகளின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை நாட்டுப்புறக் கலைகள் தமிழகத்தில் சிறப்பாக நடைபெற்று வந்தன. கணிணி, கைபேசி, தொலைக்காட்சி போன்ற நவின மீடியாக்கள் மூலம் நாட்டுப்புறக் கலைகள் முற்றிலும் அழிந்து வருகின்றன.

எங்களைப் போன்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கிராமப் புற மாணவர்களுக்கு நாட்டுப்புறக் கலைகளை கற்றுக் கொடுப்பதை எங்கள் பள்ளி நிர்வாகம் ஊக்குவிப்பதைப் போன்று தமிழகத்தின்  மற்ற பள்ளிகளுக்கும் தொடர்ந்தால் பள்ளிக்கூடங்களை நாட்டுப்புறக் கலைகளையும் அழியாமல் பாதுகாக்கலாம், என்றார்.

நன்றி: தி இந்து 02.11.2015

No comments:

Post a Comment