Labels

Tuesday, March 11, 2014

ஏமாற்றத்துடன் திரும்பும் வெளிநாட்டுப் பறவைகள்



ராமநாதபுரத்தில் மாவட்டத்தில்  காஞ்சிரங்குடி, சித்திரங்குடி, மேல செல்வனூர், கீழ செல்வனூர், ஆகிய பகுதிகளில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இங்கு ஆஸ்திரேலியா பிளமிங்கோ, ரஷ்யா நீர் வாத்து, மஞ்சள் மூக்கு நாரை, உள்ளன், அரிவாள் மூக்கன், நாரை, பாம்பு தாரா, நீர் காகங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பறவைகள் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை கூடுகட்டி இனப்பெருக்கும் செய்து பின்னர் ஏப்ரல், மாதங்களில் தங்கள் குஞ்சுகளுடன் தங்கள் தாயகங்களுக்கு திரும்பி செல்லும்.

கடந்த மூன்று ஆண்டுகாலமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததினால் கண்மாய்கள் வறண்டும், நீர் நிலைகளும் நிரம்பவில்லை. பல மரங்கள் பட்டுப்போனதாலும்,  வெளிநாட்டில் இருந்து வரும் பறவைகள், கூடு கட்டி, அதில் தங்கி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய வாய்ப்பில்லாமல் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நீர் ஆதாரங்களையும், மரங்களைப் பாதுகாக்க  போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை என  பறவைகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது,
 ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலணங்களையோட்டிய மரங்கள் அதிகமாக வெட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்களுக்கு பகரமாக புதியதாக மரங்கள் ஏதும் வளர்க்கப்படவில்லை. இதனால் மரங்கள் வெட்டப்பட்ட பகுதி பாலைவனம் போல் காட்சி தருகிறது.

 சரணாலயங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை அமைக்கவும் மழை நீரை சேமிக்கவும் போதுமான நிதிகள் ஒதுக்கிடு செய்ய வேண்டும். சரணாலயங்களில் உள்ள நீர்நிலைகளில் உணவுக்காக வளர்க்கப்படும் மீன்குஞ்சுகளை சரியான தருணத்தில் விட வேண்டும். இவற்றை முறையாக செய்தாலே பறவைகள் சரணாலயம் அழியாமல் காக்கலாம், என்றார்.



இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயகாந்தன் நமது செய்தியாளரிடம் கூறியதாவது,

தனுஷ்கோடிக்கு பிளமிங்கோ பறவைகள் நூற்றாண்டுகாலமாக தவறாமல் வந்து கொண்டு இருக்கின்றன. பிளமிங்கோ பறவைகளின் வருகையை ராமேஸ்வரம் மீனவர்கள் அதிர்ஷ்டமாகவும் கருதுகின்றனர். மேலும் தனுஸ்கோடி தீடை பகுதிகளிலிருந்து கடல்புறாக்கள், உல்லான் குருவி, கடல் நாரை, கடல் கொக்கு, போன்ற பறவைகளும் ஏராளமாக தனுஷ்கோடி கடல் பகுதியில் வந்து குவிந்துள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு  வருகை தரும் வெளிநாட்டுப் பறவைகளை வனத்துறையினர் ஆண்டு தோறும் கணக்கெடுக்கின்றனர். அதுபோலவே ஆண்டுதோறும் தனுஷ்கோடி கடல்பகுதிக்கு வரும் பறவைகளை வனத்துறையினர் கணக்கெடுக்க வேண்டும். மேலும் தனுஸ்கோடியில்  பறவைகள் சரணாலயம் அமைத்து சுற்றுலாபயணிகள் பறவைகளை பார்வையிடவும் முறையான மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும், என்றார்.

 இது குறித்து பறவைகள் சரணாலய அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘பறவைகள் அதிகம் தங்கும் பிரதான பகுதியில் எந்த மரங்களும் வெட்டப்படவில்லை. சரணாலயத்தின் வெளிப்பகுதிகள்ல தான் தான் மரங்கள் காய்ந்துள்ளன. வனத்துறை சார்பில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை .வழக்கமாக வனத்துறை சார்பில் வனத்துறையால் வெட்டி விற்பனை செய்யப்படும். காய்ந்து போன மரங்கள் பறவைகள் வந்து அமருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதால் அவற்றை அகற்றாமல் வைத்துள்ளோம், என்றார்.

நன்றி தி இந்து (மதுரை பதிப்பு 10.03.2014)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நிலத்தடி நீர் எங்கும் குறைந்து கொண்டே வருகிறது... இன்னும் என்னென்ன நடக்கப் போகிறதோ...?

Post a Comment