Labels

Sunday, March 23, 2014

பாம்பன் பாலம் யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்படுமா?


 நூற்றாண்டு பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்குமாறு ராமேஸ்வரம் தீவு மக்களின் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது.



பாம்பன் பாலம்
 

1914 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு சென்னையில் இருந்து தனுஸ்கோடிக்கு ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டது.  மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணைப்பு கடற்பகுதிகளில் இந்த பாலம் இந்தியாவோடு ராமேஸ்வரம் தீவை இணைத்தோடு மட்டுமின்றி 1964 ஆம் ஆண்டு தனுஸ்கோடியை புயல் தாக்கும் வரையிலும் தமிழகத்துடன் இலங்கையை கப்பல் போக்குவரத்து மூலம் இணைத்தது.

 இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம்  இதுதான். மேலும் இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமும் ஆகும். இந்த பாம்பன் பாலம்  2.3 கி.மீ. நீளம் கொண்டது. கடலுக்குள் அமைக்கப்பட்ட 146 தூண்கள் இந்த ரயில் பாலத்தை தாங்கி நிற்கின்றன. இந்த தூண்கள் கட்ட 4 ஆயிரம் டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேய என்ஜினீயர் ஸ்கெர்சர் கட்டியதால் இந்த ரெயில் பாலத்துக்கு அவரது பெயரே சூட்டப்பட்டுள்ளது.

தனுஸ்கோடி புயல்

 


1964–ம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய புயலில் துறைமுக நகரமான தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது. அதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தன.  அத்தருணத்தில் என்ஜினீயர் ஸ்ரீதரன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு சில மாதங்களிலேயே பாலத்தை சீரமைத்து மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது.

பின்னர் 2006 ஆம் ஆண்டு 92 ஆண்டுகள் கழித்து மீட்டர் கேஜ் ரெயில் பாதையாக இருந்த பாம்பன் பாலம் ரயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பின்னர் மீண்டும் 2007 ஆம் ஆண்டு மீண்டும் அகல ரயில் பாதையாக பாம்பன் ரயில்வே பாலம் மாற்றப்பட்டு மீண்டும் ரயில்வே போக்குவரத்து துவங்கியது.

நூற்றாண்டு தபால் தலை

 பாம்பன் ரயில்வே பாலம் நூற்றாண்டு கொண்டாட்டம் கடந்த பிப்ரவரி ஒரு மாத காலம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தை பாம்பனில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கிவைத்தார். சென்னையில் நடைபெற்ற விழாவில் பாம்பன் ரயில்வே பாலத்தின் நூற்றாண்டு பெருமையைக் குறிக்கும் வகையில் தபால்தலையும் வெளியிடப்பட்டது.
இத்தகைய நூற்றாண்டு பாரம்பரியமிக்க பாம்பன் ரயில் பாலத்தை யுனெஸ்கோ உலக பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்குமாறு ராமேஸ்வரம் தீவு மக்களின் நெடுநாளைய கோரிக்கையாக உள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் யுனஸ்கோ பாரம்பரிய சின்னங்களக  தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில்,  தராசுரம்  ஐராவதீஸ்வரர் கோவில்,  கங்கை கொண்ட சோழபுரம் கோவில்,  மகாபலிபுரம் சிற்பங்கள் மற்றும்  நீலகிரி (ஊட்டி) ரயில் ஆகியவற்றை பாரம்பரிய சின்னங்களாக அறிவித்துள்ளது.

இது குறித்து நமதுசெய்தியாளரிடம் பேசிய மதுரை கோட்ட உயர் ரயில் அதிகாரி கூறியதாவது,

இந்திய ரயில்வேயின் டார்ஜ்லிங் இமாலயா ரயில், நீலகிரி (ஊட்டி) மலை ரயில் மற்றும் கல்கா-சிம்லா ரயில் ஆகியவற்றுக்கு யுனஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து கிடைத்துள்ளது.

 தற்போது நூற்றாண்டை அடைந்திருக்கும் பாம்பன் பாலம் யுனஸ்கோவின் அங்கீகாரம் பெற முழு தகுதியும் பெற்றிருக்கிறது. தென்னக ரயில்வே கடந்த 2007 ஆம் ஆண்டில் இருந்து பாம்பன் பாலத்திற்கு யுனஸ்கோவின் பாரம்பரிய அந்தஸ்து பெறுவதற்கான முயற்சியையை மேற்கொண்டு வருகின்றது, என்றார்.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தென்னக ரயில்வே + நம் அனைவரும் எண்ணமும் விரைவில் நிறைவேறட்டும்...

Post a Comment