Labels

Tuesday, December 17, 2013

உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி திருக்கோவில் போக்குவரத்து வசதி செய்து தரக்கோரிக்கை

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியிலிருந்து 10 கிலோ மீட்டத் தொலைவில் உள்ளது உத்திரகோசமங்கை. சிதம்பரம் கோவிலுக்கு முன்பே இந்த கோவில் தோன்றியதால் உத்திரகோச மங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பெயரும் உண்டு. மேலும் இராவணின் மனைவி மண்டோதரி இங்கு வந்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஸ்தலம் பற்றி மாணிக்கவாசகர் 9 பாடல்கள் பாடி உள்ளார். உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் விழா 17 ஆண்டுகளுக்கு 2010ம் ஆண்டு நடைபெற்றது. 


வருடந்தோறும் உத்திரகோசமங்கை மங்களநாத சுவாமி மரகத நடராஜர் சன்னிதியில் இங்குள்ள நடராஜர் ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்ட நிலையில் அருள்பாலிப்பார். ஆண்டுக்கு ஒரு முறை வரும் ஆருத்ரா தரிசனத்தன்று, சிலையில் சந்தனம் களையப்பட்டு, பல்வேறு அபிஷேகங்கள்  32 வகை மூலிகைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அதன் பின்னர்  பச்சை மரகத மேனியாய் அலங்கார கோலத்தில் அருள்பாலித்த சுவாமியை, பக்தர்கள் தரிசிப்பார்கள்.

 ஐந்தரை அடி உயரமுள்ள மரகத நடராஜர் சிலை எப்பவும் சந்தனம் பூசப்பட்டு இருந்ததால் தான் ஆங்கிலேயர்கள் அது மரகதம் என்று தெரியாமல்  நாட்டிற்கு  கடத்தாமல் இருந்தார்கள் என்றும், அந்நியர்களின் படையெடுப்புகளின் போதும் தப்பியது என்றும் சொல்வதுண்டு.

கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள், நந்தி சிலைகள் முதலியன கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்துவதாகவும், கடற்காற்று அரித்த எச்சங்களாகவும் நமக்கு காட்சித் தருகின்றன. மேலும் உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில் உள்ள மீன்கள் நல்ல தண்ணீரில் வாழக்கூடிய மீன்கள் கிடையாது. மேலும் உப்பு நீரில் அதாவது, கடல் நீரில் வாழக்கூடிய மீன்வகையைச் சார்ந்தவையாகும். திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம் இக் கோவில் வாயிலில் நிகழ்த்தப்பட்டதாகும்.

உள்ளுர் விடுமுறை

உத்திரகோசமங்கை மங்கள நாதசுவாமி திருக்கோவில் ஆருத்ரா   தரிசன திருவிழா 17.12.2013 அன்று நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு 28.12.2013 அன்று சனிக்கிழமை பணிநாளாக  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து வசதி

ராமநாதபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் (ராமேஸ்வரத்தில் இருந்து 75 கிலோ மீட்டர்) உள்ள உத்திரகோசமங்கைக்கு முறையான போக்குவரத்து வசதி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பக்தர்கள் உத்திரகோச மங்கைக்கு ராமேஸ்வரத்திலிருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் முறையான போக்குவரத்து ஏற்படுத்தி தரவேண்டும் என நீண்டகால கோரிக்கை விடுத்து வருகின்றனர். போக்குவரத்து வசதி முறையாக இல்லாதால் ராமேஸ்வரத்திற்கு வரும் யாத்ரீகர்கள் உத்திரகோசமங்கைக்கு செல்லாமலே திரும்புகிறனர்.

 முறையான போக்குவரத்து வசதிகள் செய்தால் அருகருகே இருக்கும் சேதுக்கரை, திருப்புல்லாணி மற்றும் உத்திரகோச மங்கை ஆகிய ஸ்தலங்களுக்கு யாத்ரீகர்கள் செல்வது சுலபமாகும். எனவே உத்திரகோசமைங்கைக்கு முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வருமா?

1 comment:

கோமதி அரசு said...

ஆருத்ரா தரிசனத்தன்று வந்து சந்தனம் களைவதை பார்த்து இருக்கிறேன், மரகத நடராஜாவை பார்க்க அன்று மட்டும் தானே முடியும்.

Post a Comment