Labels

Tuesday, December 24, 2013

மீனவப் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வர வேண்டும்-ஜோ டி குரூஸ்.


2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை எழுத்தாளர் ஜோ டி குரூஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு சென்னையிலுள்ள கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக முக்கியமான நிபுணராக இருக்கிறார். ''நான் ஒரு பிறவி மீனவன்!'' என்று நெஞ்சு நிமிர்த்துகிற ஜோ, தென் தமிழக மீனவக் கிராமமான உவரியின் பிள்ளை. நெய்தல் நிலத்தின் நிலையற்ற வாழ்வை உப்பு மொழியோடு பதிவு செய்திருந்த இவரது 'ஆழிசூழ் உலகு' மற்றும் கொற்கை ஆகிய இரண்டு நாவல்களும் தமிழ் எழுத்துலகின் முக்கியமானப்  பிரதிகள். அடுத்ததாக கப்பல்கள் சார்ந்த பின்னணியில் அடுத்த நாவலை எழுதிக் கொண்டிருக்கிறார் ஜோ டி குருஸ். இனி அவரிடம் உரையாடியதிலிருந்து...

...
2004 டிசம்பரில் வந்த சுனாமி வந்தப் பிறகுதான் விளிம்பு நிலையில் வாழும் நெய்தல் மக்கள் பற்றி உலகிற்கு தெரியப்படுத்தியது. இப்படிப்பட்ட மக்கள் நெய்தலில் வாழ்ந்து வருகிறார்கள் என்று தெரியனும் என்றால் நம்மவர்களுக்கு கூட ஒரு சுனாமி தேவைப்படுகிறது. இது மிகப் பெரிய கொடுமை. 

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதாகச் சொல்லி வந்த தொண்டு நிறுவனங்களும், அரசும் நாங்கள் ரூ1,000 கொடுத்தால் ரூ.100 ரூபாய் தான் மக்களிடம் போய் சேர்கிறது என்று வெட்கம் இல்லாமல் சொன்னார்கள்.

இங்கே சென்னையில் டுமில் குப்பம் அல்லது நொக்சிக்குப்பம் கூடப் போய் பார்த்தால் கூட மனிதன் வசிப்பதற்கு தகுதியே இல்லாத வீடுகளைதான் இந்த அரசாங்கம் மீனவர்களுக் கட்டிக் கொடுத்திருக்கிறது.
...
பெரிய பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் கடலுக்குள் வந்து கடலின் வளங்களை ஆக்கிரமிப்பு செய்வதற்கும் அபகரிப்பதற்கும் உரிய மிகப் பெரிய முயற்சியில் இருக்கிறார்கள். ஏற்கெனவே இருக்கும் கடற்கரை மேலான் திட்டமாக இருக்கட்டும், கடல் மீன்பிடி ஒழுங்காற்று சட்டமாக இருக்கட்டும், இவையெல்லாம் கடற்கரை மக்களையே இல்லாமல் தான் ஆக்குகிறது.
கடற்கரையில் இருந்து 6வது நாட்டிகல் தூரத்தை அண்மை கடல் என்றும் 12வது நாட்டிகல் தொலைவை ஆழ்கடல் எனப் பிரிக்கிறார்கள். நமது ஆழ்கடல் பகுதிகளில் 1,80,000 டன்களுக்கு மேலான மீன்வளங்கள் இருப்பதாக செயற்க்கைகோள் உதவியுடன் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஆழ்கடல் பகுதியில் நம் மீனவர்கள் பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடிக்கக்கூடாது என்றும் பாதுகாப்பிற்கு பங்கம் வந்திடும் என்றும் அரசியல்வாதிகளும், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் சொல்கிறார்கள். காரணம் இந்த சட்டங்கள் மற்றும் திட்டங்கள் எல்லாம் அயல் நாட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் நமது மீன்வளத்தை சூறையாடுவதற்காக நம்மவர்களாகல் உருவாக்கப்பட்டவையாக உள்ளன.
...
மீனவர்கள் என்பதே ஒரு வேட்டைச் சமூகம். இந்த வேட்டைச் சமூகம் எப்படி இருக்கிறது என்றால் இது சுயசார்புடன் உள்ளவர்கள். யாரையும் சார்ந்து தொழில் செய்யக்கூடியவர்கள் அல்லர். கடல் தொழிலைப் பொறுத்த மட்டில் கூலி என்று கொடுக்க மாட்டார்கள். பங்கு என்றுதான் கொடுப்பார்கள். வலைக்காக ஒரு பங்கு... படகுக்கு ஒரு பங்கு... இவற்றில் கிடைக்கக்கூடிய மீன்களையோ அதன் வருமானங்களோ அத்தனை பேருக்கும் பங்குகளாக பிரித்துக் கொடுக்கிறார்கள். 
...
காலங்காலமாக நம்முடைய ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன், மண்டபம், தொண்டி, அம்மாப்பேட்டை மீனவர்கள் எல்லாருமே பாக்ஜலசந்தி அதாவது வடகடலில் தொழில் செய்யக்கூடிய மக்கள் இலங்கையின் வடமேற்கு பகுதியில்தான் தொழில் செய்கிறார்கள். இது இன்று நேற்றல்ல பன்னெடுங்காலத்திற்கு முன்னரே அங்குதான் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் சார்ந்த பகுதியில் மீன்வளம் இல்லை. நீர் திரளாக இருக்கிறது. இதனால் இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் மீன்பிடிக்கப் போகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் பூங்குடி தீவு, நெடுந்தீவு, ஊடுதாவு தீவு ஆகியப் பகுதிகளில்தான் மிகப் பெரிய மீன்வளம் இருந்து கொண்டு இருக்கிறது. அந்த மீன்வளத்தை தேடி அவர்கள் போகிறார்கள். 

மீனவர்கள் இயற்கையிலேயே வேட்டை ஆடக்கூடிய சமூகம். மீன்கள் எங்கு செல்கிறதோ அவற்றை தேடி வேட்டையாடுவதே மீனவர்களின் வழக்கம். அதுபோக கடலில் எல்லை என்று எதுவும் இல்லை. எல்லைச் சட்டம் என்றும் எதுவும் இல்லை. இரவில் மீனவன் வலை போட்டு கிடக்கும்போது பகலில் விடிந்துப் பார்த்தால் வலை போட்ட இடத்தில் கிடக்காது. நெய்தல் நிலத்தின் அடிநாதமே இதுதான். மீனவன் இருந்த இடத்திலேயே இருக்க முடியாது. ஏனென்றால் அது நிலம் அல்ல. அது நீர். இதனால் இடம்பெயரக்கூடிய சூழல் ஏற்படுகிறது. இதனால் மீனவனை எல்லை மீறினான் என்று சொல்ல முடியாது. 

நம்முடைய மிகப்பெரிய பகைநாடு என்று சொல்லக்கூடிய பாகிஸ்தானில் கூட இந்திய மீனவர்கள் பிடிபடும்போது கூட நம் மீனவர்களை சிறையில் அடைத்து பின்னர் பக்குவமாய் இந்தியா அனுப்பி வைத்து விடுகிறார்கள். அதே போல் பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியாவில் பிடிபடும்போதும் கூட இந்தியாவும் அவ்வாறே நடந்து கொள்கிறது. இது வாடிக்கையான நிகழ்வு. இது புரிதல் சார்ந்த விடயம்.
...

மீனவர்கள் பேச்சுவார்த்தை என்பது நான்கு தரப்பு பேச்சுவார்த்தையாக நடைபெற வேண்டும். இலங்கை மீனவர்களும், தமிழக மீனவர்களும், இலங்கை அரசு அதிகாரிகளும், தமிழக அரசு அதிகாரிகளும்  இந்த பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். பேச்சுவார்த்தை நடத்தக்கூடிய அதிகாரிகள் நெய்தல் நிலத்தைப் பற்றிய சரியான புரிதல்கள் உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய கடலோர காவல்படை, மீனவர்களை மிகப்பெரிய எதிரிகளாகதான் பார்க்கிறார்கள். நெய்தல் நிலத்தின் அடிநாதமே தெரியாத அதிகாரிகள்தான் அதிகார மையத்திற்கு வந்து விடுகிறார்கள்.  இத்தகைய அதிகாரிகள் நெய்தல் நிலத்தின் வாழ்வை புரிந்து கொண்டால் தான் உரிய தீர்வையும், நியாயத்தையும் வழங்க முடியும்.
...

கச்சத்தீவில் புனித அந்தோனியார் திருவிழா வருடந்தோறும் நடைபெறக்கூடிய ஒரு நிகழ்வு. இந்த திருவிழாவிற்கு இலங்கையில் இருந்தும் மீனவர்கள் வருகிறார்கள். இந்தியாவில் இருந்தும் மீனவர்கள் வருகிறார்கள். இப்படி அந்தோனியார் திருவிழாவிற்கு வரக்கூடிய இருநாட்டு மீனவர்களும் தங்களின் அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள். 

இங்கு மீனவர்களிடம் எந்தப் பிரச்சினையும் கிடையாது. பாரம்பரிய, கட்டுமர, நாட்டுப்படகு மீனவர்களிடம் எவ்விதமான பிரச்சினையும் கிடையாது. அப்படியானால் பிரச்சினை எங்கு வருகிறதென்றால் அரசியல்வாதிகள், ஆட்சி அதிகாரங்களில் இருப்பவர்களால் தான் பிரட்சினையே வருகிறது.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் ஒலிக்கும்போதெல்லாம் கடலுக்குள்ளே மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படுகின்றது. நடுக்கடலில் அவர்கள் பழிதீர்த்துக் கொள்கிறார்கள். 

கச்சத்தீவை திரும்ப பெறுவது மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. நாம் கேட்க வேண்டியது கச்சத்தீவையும் தாண்டிய நீர் பரப்பில்  நாம் தலைமுறை தலைமுறையாக பிடித்த மீன்பிடி உரிமையை மீட்டுத் தரவேண்டும்.

அந்தக் காலத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்க முன்வந்தபோது தமிழகத்தில் எதிர்ப்புக்குரல்கள் இருந்தது. அன்று ஆண்ட மத்திய காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்புக்குரல்கள் எல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அன்று காங்கிரஸ் தலைமை பீடத்தில் இருந்தவர்கள் தமிழகத்தில் இருந்தவர்களைப் பார்த்து, '' காய்ந்து போன ஒரு நிலத்திற்காக ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்" என்றுதான் பேசினார்கள்.
இன்னும் சரியாகச் சொல்லப்போனால் நம் ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. காரணம் இன்று கச்சத்தீவை சுற்றி எண்ணெய்வளங்கள் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் சீனாவிற்கு கண்டிப்பாக ஆர்வம் இருக்கும். இலங்கை சீனாவுடனான உறவை வலுப்படுத்த எப்பாடு பட்டாலும் கச்சத்தீவை தக்கவைத்துக் கொள்ளும். தமிழக மீனவர்களையும் கச்சத்தீவை நெருங்க விடாமலும் தடுக்கும். இது நிதர்சமான உண்மை.
...

நெய்தல் எப்போதும் சோகமாய் இருக்கிறது என்பதைத சங்க காலத்தில் இருந்து இந்த நிலைதான் என்று சொல்லுவார்கள். ஆனால் நான் எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து பார்க்கப்போனால் கடற்கரை கிராமங்களில் பெருமளவில் விதவைகள் இருக்கிறார்கள். 

கச்சான் காலத்தில் கடலடி அதிகம் இருக்கும். அந்தப் பருவங்களில் தொழிலுக்குப் போகக்கூடிய ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் ஆண்கள் இறந்து விடுகிறார்கள். அவ்வாறு ஆண்கள் இறக்கும்போது அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த பொறுப்பும் கரையில் இருக்கும் பெண்களுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. அதேபோல் ஆண்கள் உயிரோடு இருக்கும் போதுகூட  பெண்கள் கரையில் இருந்து தொழில் செய்கிறார்கள். வலை கட்டுகிறார்கள், கருவாடு காயப் போடுகிறார்கள் அவற்றை சந்தையில் போய் விற்பனை செய்கிறார்கள். இவ்வாறாக நெய்தல் பெண்கள் சமூக  மற்றும் பொருளாதார உறவுகளை பேணுகிறார்கள். 

நெய்தல் நிலத்தில் குடும்பச் செயல்களை பெருமளவில் செய்பவர்கள் குடும்பத் தலைவியாகத்தான் இருக்கிறார். ஆனால் இது தெரிந்துதான் என்னவோ நெய்தல் நிலத்தில் பெண்களுக்கு முக்கியப் பங்கினை கொடுப்பதே இல்லை. சாதாரணமாக ஒரு வீட்டில் உறவுகளை ஆய்வு செய்யும்போது ஆண்கள் இருக்கைகளில் அமர்வது பெண்கள் பாய் விரித்து தரையில் அமர்வது நடந்து கொண்டிருக்கிறது. ஆணாதிக்க சமூகம் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது இந்த நெய்தல் நிலம்தான். எனக்கு தெரிந்து இந்த நிலை மாறினால்... நெய்தலில் குடும்பங்களில் தலைமைப் பொறுப்பு பெண்களிடம் வந்தால் மீனவச் சமுதாயத்தின் நிலைமாறும்.
...

No comments:

Post a Comment