Labels

Tuesday, December 3, 2013

பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழாவை பாம்பனில் நடத்த கோரிக்கை

பாரம்பரியமான பாம்பன் ரயில்பாலம் பயன்பாட்டிற்கு வந்து  100 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.  இதனைத் தொடர்ந்து பாம்பன் பாலத்திற்கு பிப்ரவரி 24, 2014 அன்று நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.



இந்த பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில்  கொண்டாடப்பட உள்ளதாக  தெற்கு ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த விழாவிற்கு பாம்பன் ரயில் பாலத்தை அகலப்பாதையாக மாற்ற முக்கிய காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்மும்,  1964ல் தனுஸ்கோடியை தாக்கிய புயலில் பாம்பன் பாலம் சேதமடைந்த போது  சிறப்பாக சீரமைத்துக் கொடுத்த இன்ஜினியர் ஸ்ரீதரனும் முக்கிய விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர்.

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா அத்தருணத்தில் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலில் பயணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தனது ஆசையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் பாம்பன் ரயில் பாலத்தின் பாலம் நூற்றாண்டு விழாவை, பாம்பனில் நடத்த தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, 500 போஸ்ட் கார்டுகளை பாம்பன் பொது மக்களிடம் எழுதி பாம்பன்  அரசு பள்ளி மாணவர்ககள் முதற்கட்டமாக அனுப்பி உள்ளனர். அது போலவே பாம்பன் பள்ளிவாசலை சார்ந்த ஜமாத்தார்களும் ரயில்வேயின் அனைத்து தரப்பினருக்கும், அப்துல் கலாமிற்கும் பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழாவை மண்டபத்தில் நடத்தாமல் பாம்பனில் நடத்த வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து நமது செய்தியாளரிடம் பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவர், பாம்பன் ரயில் பாலத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் என்ற தெற்கு ரயிலிவேயின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை பாம்பன் தீவு மக்களுக்கு அளித்துள்ளது.

பாம்பன் பாலம் நூறாண்டுகளை கடந்த பின்னரும் இன்னும் ஸ்திரதன்மையோடு இருக்கிறது. இதற்கு காரணம் எங்களின் மூதாதையர்களின் உடல் உழைப்பும் இந்த பாலத்தில் அடங்கியுள்ளது.  பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழாவை, பாம்பனில் நடத்துவது தான் சிறப்பாகவும் இருக்கும் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறியதாவது, பாம்பனில் நூற்றாண்டு விழாவை நடத்த பாம்பனில் இடவசதி இல்லை என்று கூறுவது தவறு. பாம்பனில் ரயில்வே மைதானம் மிகப் பெரிய அளவில் உள்ளது. இதில் ஒரே நேரத்தில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஓன்று திரள முடியும். மேலும் பாம்பன் ரயில் பாலம் நூற்றாண்டு விழாவை மண்டபம் மக்கள் நடத்த பெரும் முனைப்பும் காட்டவில்லை. ஆகையால் இதனை பாம்பனில் நடத்தினால் அவர்கள் ஆட்சேபனையும் தெரிவிக்கப் போவதில்லை. எனவே பாம்பனில் பாலத்தின் நூற்றாண்டு விழாவினை நடத்தினால் தான் சிறப்பாக இருக்கும் என்றார்.

No comments:

Post a Comment