Labels

Tuesday, November 5, 2013

ராமேஸ்வரத்திலும் தங்கச் சுரங்கம்?
ராமேஸ்வரம் தீவில் தங்கச்சுரங்கங்கள் உள்ளதாகவும் அதனை அகழ்வராய்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 
இந்தியாவில் மிகப் பழமையும் வரலாற்றுச் சிறப்பும் வாய்ந்த ஊர்களில் ராமேஸ்வரமும் ஒன்று. கி.பி 1480 ஆம் ஆண்டில் ஏற்பட்ட புயலில் தான் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் பிரிந்து பாம்பனும் மண்டபமும் துண்டிக்கப்பட்டு தனித் தீவாக உருவானது. மேலும் ராமேஸ்வரம் தீவின் மற்றொரு முனை இலங்கைக்கு வெகு அருகில் 18 கி.மீ தொலைவில் உள்ளது.
ராமேஸ்வரம் பன்னெடுங்காலமாக போர்களமாகவும், பல மன்னர்களின் புகலிடமாகவும் திகழ்ந்துள்ளது. சில மன்னர்கள் ராமேஸ்வரத்தை கைப்பற்றுவதை தங்கள் வாழ்வின் லட்சியமாகவும் கொண்டிருந்தனர். இலங்கையை கைப்பற்ற முயன்ற மன்னர்களுக்கு ராமேஸ்வரம் ஓய்விடமாகவும் திகழ்ந்துள்ளது. அரபிகள் 700 ஆண்டுகளுக்கு முன்னரே ராமேஸ்வரம் துறைமுகத்தில் குதிரைகளை இறக்குமதி செய்துள்ளதை இன்றும் கோவிலில் ஓவியமாக காணலாம்.
கி.பி 910ல் ராஸ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன் சோழர்களையும், இலங்கையையும் வென்று ராமேஸ்வரத்தில் வெற்றித்தூணை நிறுவினான். மாலிக்கா கபூர் மதுரையை வென்ற பிறகு பாம்பனில் கி.பி 1371ம் ஆண்டில் பள்ளிவாசல் ஒன்றை நிறுவியதாகவும் தகவல் உண்டு. கி.பி 1637ல் திருமலை நாயக்கர் இரண்டாம் சடைக்கத் தேவரோடு தளவாய் சேதுபதி ராமேஸ்வரத்தில் போர் புரிந்துள்ளார். கி.பி 1795 ஆங்கிலேயரது ஆட்சியை ஏற்படுத்திய பிறகு இலங்கையில் டச்சக்காரருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப்படை அணிகளுக்கு உதவ ராமநாதபுரத்தில் இருந்து ஆங்கிலப் படையணிகள் தளபதி பௌஷேர் தலைமையில் பாம்பன் துறையிலிருந்து 13.11.1795 இலங்கை கல்பிட்டியாவிற்கு அனுப்பப்பட்டது.
இதேபோல்   பாண்டிய மன்னர்கள், சோழ மன்னர்கள், ராஸ்ட்ரகூடர்கள், நேபாள மன்னர்கள், கொய் சாலா மன்னர்கள் , நாயக்கர்கள் , சேதுபதிகள் என பல மன்னர்கள் ராமேஸ்வரம் கோவிலுக்கு காணிக்கைகளாக விலை மதிக்க முடியாதத ஆபரணங்களை செலுத்தினர். இவற்றையெல்லாம் எதிரிநாட்டு மன்னர்களிடம் இருந்து காப்பதற்கு கோவிலுக்குள்ளும் வெளியேயும் நிலவறைகளையும், சுரங்கக்களையும் கோவில் நிர்வாகத்தினர் அமைத்தனர். அவற்றில் ஒன்றை ராமநாதசுவாமி கோவில் கர்ப்ப கிரகத்தின் அருகே இப்போதும் காணலாம்.
 ராமநாதசுவாமி ரத்தினக்கிரீடம், பர்வதவர்த்தனி ரத்தின கிரீடம், உத்சவ அம்பாள் ரத்தின கீரிடம், இரட்டை வடம் பவள மாலை, இரத்தினங்களால் இழைத்த ஹஸ்தம் என்ற ஆபரணம், இரத்தின கை தீவட்டி, தங்கக்குடை, உத்சவ நாயகர் தங்கக் கவசம், தங்கக்குடம், வைரக் கிரீடம், இரட்டை கிளி பெரிய பதக்கம், தங்க மூடு பல்லாக்கு இவையெல்லாம் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள சில விலை உயர்ந்த ஆபரணங்கள் மட்டுமே. இவற்றில் அளவில் சிறியவற்றை கோவில் நிலவறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் உள்ள சிறுகோவில்
 ராமேஸ்வரம் தீவில் அரியாண்குண்டு புத்தர் கோவில், தங்கச்சிமடம் மங்கம்மா சாலை அருகில் உள்ள பழமை வாய்ந்த முனியசாமி கோவில், தனுஸ்கோடி ராமர் கோவில் என ராமேஸ்வரம் தீவில் மணலில் புதையுண்டு கிடக்கும் கோவில்களின் எண்ணிக்கை ஏராளம்.
தொல்லியல் ஆர்வலர் ஜெயகாந்தன் நமது செய்தியாளரிடம் கூறியதாவது, "1545 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சேதுபதி மன்னரின் அரண்மனை வளாகத்தில் தான் இப்போது ராமேஸ்வரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தற்போது உள்ளது. இங்குள்ள படித்துறை குளத்தில் இருந்து கெந்தமாதன பர்வதம் கட்டயத்தேவர் கோட்டை வரையிலும் சுரங்கம் இருந்ததாக காலங்காலமாக நம்பப்படுகிறது.
பல வருடங்களுக்கு அரியாங்குண்டு கிராமத்தில் கிணறு தோன்றும் போது புத்தரின் தலைப்பகுதியும், புத்தரின் முழு உருவச்சிலையும், தாமிரத்தினால் ஆன சிங்க உருவ பீடமும் கிடைத்தது.  வரலாற்று புகழ் மிக்க ராமேஸ்வரத்தில் அகழ்வாராய்ச்சி பணிகளை செய்ய வேண்டும் என்பது ராமேஸ்வரம் மக்களின் நீண்ட கால கோரிக்கை, என்றார்.
பாம்பனைச் சார்ந்த வரலாற்று ஆர்வலர் தாகிர் சைபுதீன் கூறுகையில், ராமேஸ்வரம் தீவு கடலோரப் பகுதிகளில் அகழ்வராய்ச்சி செய்ய உள்ளதாக தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகம் 2006ம் ஆண்டு அறிவிப்போடு நிறுத்திக் கொண்டது.
5000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை இந்தியாவுடன் இணைந்து இருந்தது. ஒரு பிரளயத்தின் போனது இலங்கை தனித் தீவானது. அதுபோலவே 600 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட புயலில் தமிழகத்தில் இருந்து ராமேஸ்வரம் தீவாப் பிரிந்தது.
இந்தப் பகுதியில் அகழாய்வு செய்தால் பல்வேறு வரலாற்று சின்னங்கள், தமிழர்களின் தொன்மையான நாகரீகச் சின்னங்களும் கிடைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். 
 1836 ஆம் ஆண்டு நியுசிலாந்து நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கப்பல் மணி கூட ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் இருந்து வணிகத்திற்காக சென்ற கப்பலின் மணி தான், என்றார்.
பழம்பெருமை வாய்ந்த ராமேஸ்வரம் தீவை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தால் வெளியில் வராத பல மர்மங்கள் வெளியே வரும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

1 comment:

கோமதி அரசு said...

அரிய தகவல்கள்.
நன்றி.

Post a Comment