Labels

Tuesday, November 19, 2013

ஆபத்தில் தேங்காய் நண்டுகள்



கணுக்காலிகள் உயிரினத்தை சேர்ந்தவை நண்டுகள். இவற்றில் பல வகை இருந்தாலும் பலரும் பார்த்திராத நண்டு வகையை சேர்ந்தது தேங்காய் நண்டு. பத்து கால்களுடன் ஓட்டினால் ஆன உடலமைப்பை கொண்டவை இவைகள்.
நண்டுகள் கடலில் முட்டைகளையிடும். முட்டையிலிருந்து வெளிவந்து சிப்பி மற்றும் சங்குகளில் ஒட்டிக்கொண்டு தங்களின் வாழ்க்கையை துவங்கும். வளர்ந்த பின் நிலத்தில் குழிகளைத் தோண்டி அதில் தேங்காய் நார்களைப் பரப்பி மெத்தென்று வாழ ஆரம்பித்துவிடும்.

தென்னை மரத்தில் ஏறி தேங்காயைப் பறித்து அதன் நாரையும் உரித்து உடைத்து உட்கொள்வதால் தான் தேங்காய் நண்டு என்ற பெயரைப் பெற்றது. மேலும் கடலின் கழிவுகளையும் மரங்களில் வாழும் பூச்சிகளையும் இவை உட்கொள்ளும்.

நிலத்தில் காணப்படும் முதுகெலும்பற்ற உயிரினங்களிலேயெ இந்த நண்டு தான் பெரியது அதிகப்பட்சமாக இரண்டு அடிவரை வளரும். மூன்று கிலோ எடையும் இருக்கும்.


மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பத்தில் தனுஸ்கோடியில் இருந்து தூத்துக்குடி வரையிலும் குருசடைத் தீவு, முயல் தீவு, அப்பா தீவு, நல்ல தண்ணி தீவு உள்ளிட்ட 21 தீவுகள் உள்ளன. இந்த தீவுக்கூட்டங்களில் மரம் ஏறும் குணம் கொண்ட தேங்காய் நண்டுகள்  வாழ்கின்றன. அதுபோன்று அந்தமான் நிக்கோபர் தீவுக்கூட்டங்களிலும், இந்தியப் பெருங்கடல் தீவுகளிலும் தேங்காய் நண்டுகள் உள்ளன. இவை தற்பொது அரிதாகி வருகின்றது.

தேங்காய் பறிக்கும்போது மரம் ஏறுபவர்கள் மரத்தில் நண்டை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவற்றைக் கொள்ளுவதாலும், தேங்காய் நண்டின் மாமிசம் மருத்துவக் குணம் உண்டு என்பதாலும் வேட்டையாடப் பட்டு அழியும் நிலையில் உள்ளது. அரிய வகை இத்தகைய நண்டுகளை பாதுகாப்பது அரசின் கடமை மட்டும் அல்ல. நம் அனைவரின் கடமையும் கூட. 

No comments:

Post a Comment