Labels

Tuesday, October 1, 2013

அடிப்படை வசதிகள் இல்லாத தனுஸ்கோடி பள்ளி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த துறைமுகம், அதனருகே ரயில்வே நிலையம், நிரம்பி வழியும் சுற்றுலாப் பயணிகள், இருபுறமும் நீலவர்ணத்தில் கடலும், இதமானக் காற்றும். தேனியைப் போன்று சுறுசுறுப்பாக எந்த நேரமும் மீன்களைப் பிடிக்கும் மீனவர்கள் இவையெல்லாம் ஒரு காலத்தில் தனுஷ்கோடியின் அடையாளமாக இருந்தது. இது எல்லாம் பழையக் கதை.
1964-ம் ஆண்டு டிசம்பர்-24 அன்று தாக்கியப் புயலில் இந்தியாவின் தேசப் படத்திலிருந்து தனுஷ்கோடி துறைமுகம் காணாமல் போனது. அன்று தாக்கியப் புயலின் கோரத்திலிருந்து இன்று வரையிலும் இன்னும் மீளவே இல்லை.

இன்றைய தனுஸ்கோடியில் மின்சாரம், சாலை வசதி, போக்குவரத்து, குடிநீர் வசதி என்று எந்த அடிப்படை வசதியும் இன்று கிடையாது. எவ்வித அடிப்படை வசதியும் இல்லாத நிலையிலும் கடலை மட்டுமே நம்பி 300க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இன்னும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
கற்றது கடலளவு என்று இருந்த தனுஸ்கோடி மீனவர்களின் குழந்தைகளுக்கு 2004ஆம் ஆண்டில்  ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் அனைவருக்கும் கல்வி திட்டதின் மூலம் ஓராசிரியர் பள்ளியை மாவட்ட நிர்வாகம் உருவாக்கித் தந்தது. இன்று அரசு நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்திருக்கிறது. வெறுமனே பெயரில் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டிருக்கும் இப்பள்ளியில் நடுநிலைப்பள்ளிக்குரிய எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததுதான் வேதனை தரக்கூடிய செய்தி.
8ம் வகுப்பு வரையிலும் உள்ள இந்தப் பள்ளியில் 73 மாணவர்கள் படிக்கிறார்கள். 4 ஆசிரியர்கள் பணிபுரிகின்றார்கள். பைபர் பொருட்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் தனுஸ்கோடியின் கடல் காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியவில்லை. கட்டிடத்தின் கூரை அடிக்கடி பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக்கூடத்திற்கு வழங்கப்பட்ட கணினி, தொலைக்காட்சி ஆகியற்றை மின்சாரம் இல்லாதால் இதுவரை பயன்படுத்தப்படவே இல்லை. குடிநீர் கிணற்றை தூர் வாராமல் மாசு அடைந்தும், கழிவறைகள் பயன்படுத்த முடியாமல் மணல் மூடிக்கிடக்கிறது.
இவ்வாறாக எவ்விதமான அடிப்படை வசதிகளுமே இல்லாமல் மழையிலும், வெயிலிலும், கடூம் கடல் காற்றிலும் பயிலும் மாணவர்களின் சிரமங்களை சில சொற்களில் சொற்களில் அடக்க முடியாது.
தனுஸ்கோடி பள்ளி என்றாலே அலறியடித்துக் கொண்டும் ஆசிரியர்களுக்கு மத்தியில் இப்பள்ளியின் பணிபுரியும் பிரான்சிஸ்மேரி, குருஞானேஸ்வரி, முத்துக்குமார், சசிகுமார் ஆகிய ஆசிரியர்கள் நால்வரும் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து சிறப்பாகச் செயல்படுவதை பாராட்டாமல் இருக்க முடியாது.

பள்ளியின் உட்புறத் தோற்றம்
பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரான்சிஸ் மேரி ''ராமேஸ்வரத்தில் இருந்து முகுந்தராயர் சத்திரம் வரையிலும் தான் போக்குவரத்து வசதி உள்ளது. அதற்கு மேல் தனுஸ்கோடி வரவேண்டும் என்றால் 3 மணிநேரம்  கடற்கரை ஓரம் நடந்தேதான்  பள்ளிக்கு வரவேண்டும். எனக்கு கூட பழகிப்போச்சி. ஆனால் குருஞானேஸ்வரி ஆசிரியை ஒரு மாற்றுத்திறனாளி தினமும் ராமநாதபுரத்தில் இருந்து வருகின்றார். அதிகாலையில் புறப்பட்டுவரும் அவர் வீடு திரும்பும்போது இருட்டிடும். ஆசிரியர்கள் 4 பேர்களுக்கும் முகுந்தராயர் சத்திரத்தில் இருந்து தனுஸ்கோடி வர போக்குவரத்து வசதி செய்து தந்தால் நன்றாக இருக்கும்'' என்றார்.
தனுஸ்கோடி கிராமத் தலைவர் மாரி ''நண்பன் திரைப்படத்தில் தனுஸ்கோடியில் பள்ளியின் ஆசிரியராக நடிகர் விஜய்  நடித்திருப்பார். தனுஸ்கோடி பள்ளியில் மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்நுட்பத்துடன் கல்வியை விஜய் வழங்குவதாக காட்டியிருப்பார்கள். தனுஸ்கோடி மீனவ மக்கள் அதையெல்லாம் கேட்கவில்லை. பள்ளியை கான்கிரிட் கட்டிடமாகவும், கழிவறையையும், கிணற்றையும் புதுப்பித்தும், மின்சார வசதி என ஒரு பள்ளிக்குரிய அடிப்படை வசதிகளை தான் கேட்கிறோம். மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் அவை கிணற்றில் போட்டக் கல்லாய் கிடக்கிறது '' என்றார் ஆதங்கத்துடன்.
 ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் ''தனுஸ்கோடி பள்ளியிலுள்ள பிரச்சனைகள் பற்றி என் கவனத்திற்கு வந்தது. சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து சூரிய சக்தியில் இருந்து மின்சாரம்  பெற ஏற்பாடு செய்கிறேன். மேலும் தனுஸ்கோடி பள்ளியின் கட்டிட வசதி மற்றும் இதர அடிப்படை வசதிகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பனிடம் நேரில் முறையிடுவேன்'' என்றார்.
ராமேஸ்வரம் தீவின் கடைகோடியில் இருக்கும் தனுஸ்கோடி பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமேயானால் அவற்றில் இருந்து பல அப்துல் கலாம்கள் உருவாவார்கள் என்பதில் ஐயமில்லை.

நன்றி தி இந்து

1 comment:

மாசிலா said...

மிகுந்த வேதனை. வருத்தத்திற்குறிய நிலமை. சினிமா கூத்தாடிகளுக்கு மக்களின் பணத்திலிருந்து பல கோடிகளை வாரி இரைக்கும் தமிழக அரசின் கண்களுக்கு இது போன்ற அவலங்கள் தெரிவதில்லையா? என்ன அநியாயம் ?
பகிர்வுக்கு நன்றி.

Post a Comment