Labels

Wednesday, September 18, 2013

கிராமத்தை காலி செய்யும் மக்கள் உச்சிப்புளி விமான நிலையம் விரிவாக்கத்தால் பாதிப்பு

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள  உச்சிப்புளி கடற்படை விமான நிலைய விரிவாக்கத்தால் உசிலங்காட்டு வலசை கிராமமே தங்கள் கிராமத்தை காலி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ஐ.என்.எஸ்-பருந்து எனும் விமான நிலையம் உள்ளது. இதனை விரிவாக்கம் செய்வதற்காக இதனைச் சுற்றியுள்ள 350 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது.

விமான நிலையத்தின் பின்புறம் தெற்கே செம்படையார் ஊராட்சிக்கு உட்பட்ட உசிலங்காட்டு வலசை கிராமத்தில் 180 வீடுகளைக் காலி செய்து, அந்த இடத்தைக் கையகப்படுத்திடவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

உசிலங்காட்டு வலசையில் குடியிருக்கும் 800-க்கும் மேற்பட்டோர் அனைவரும் தென்னை விவசாயத்தை மட்டும் அறிந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள். இந்தக் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி, இரண்டு வழிபாட்டுத் தலங்கள், ரேசன் கடை ஒன்று, குடிநீர் தொட்டிகள் ஆகியன உள்ளன.

செம்படையார் ஊராட்சி மன்றத் தலைவர் பிலால் செம்பை ‘’200 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்விகமாக வாழ்ந்த இடத்தை விட்டு அகதிகைளைப் போன்று மக்களை வெளியேறச் சொல்கிறார்கள் அதிகாரிகள். மாவட்ட ஆட்சியரில் இருந்து அனைத்து அதிகாரிகளும் எவ்விதமான உத்திரவாதமின்றி வெறும் ஈட்டுத் தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு இடத்தை காலி செய்யச் சொல்கின்றார்கள். இக்கிராம குழந்தைகளின் கல்வி, இளைஞர்களின் எதிர்காலம் எல்லாம் தற்போது கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழக அரசு ஒரு நல்ல தீர்வை தரவேண்டும்‘’ என்றார்.

உசிலங்காட்டு கிராமத் தலைவர் கண்ணையா ‘’ நாங்கள் கடற்படை விமான நிலையத்திற்காக தாராளமாக எங்கள் நிலங்களை விட்டுத் தரத் தயாராகவே இருக்கின்றோம். ஆனால் அதற்கு பதிலாக அனைத்து அடிப்படை வசதிகளுடன், பள்ளிக்கூடம், தண்ணீர் வசதி, வழிபாட்டுத் தலங்கள் என எங்கள் பழைய கிராமம் போன்றே மறுகுடியமைக்க வேண்டும். இந்த விமானநிலையம் விரிவாக்கத் திட்டத்தால் அடிப்படை வசதிகள் மறுக்க்ப்படுகின்றன. எங்கள் கிராமத்திலிருந்து பிரதான சாலையை அடைய மண் சாலையிலேயே 5 கிலோ மீட்டர் பயணித்து நெடுஞ்சாலையை அடைய வேண்டியுள்ளது. இயங்கி வந்த ரேசன் கடையை கூட அரசு இழுத்து  மூடிவிட்டது. முறையான தெரு விளக்குகள் கூட கிடையாது. இருட்டி விட்டால் கிராமத்தை விட்டு அவசர வசதிகளுக்கு கூட வெளியேற முடியாத நிலை. இன்னும் சொல்லிக் கொண்டேப் போகலாம்.  அரசு அதிகாரிகள் எங்களின் அடிப்படை வசதிகளை  பறித்து கிராமத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்ற பணிக்கிறார்கள்‘’  என்றார்.

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் ‘’ இது ஒரு வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனை. இவர்கள் விவசாயம் தவிர வேறெந்த தொழிலும் அறியாத மக்கள். விமான நிலையம் விரிவாக்கத்திற்கு மக்கள் குடியிருப்பு அல்லாத நிலங்கள் அருகிலேயே இருக்கின்றன. அவற்றை அரசு பரிசீலிக்கலாம். அல்லது உசிலங்காட்டு வலசை கிராம மக்கள் திருப்தி அடையும் வண்ணம் அவர்களுக்குரிய குடியிருப்புகளை கட்டிக் கொடுத்து, தென்னை விவசாயம் சார்ந்த பகுதியில் மறுகுடியேற்றம் செய்யலாம். இதனை எல்லாம் மறுத்து அவர்களை வெளியேற்றுவார்களேயானால் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்துவிட்டு அவர்களை அகற்றுவது போல் ஆகிவிடும்‘’ என்றார்.


விமான நிலையத்தின் அதிகாரி ஸ்ரீதரை தொடர்பு கொண்டபோது கொச்சியில் உள்ள ஐ.என்.எஸ் அலுவலகத்தை தொடர்பு கொண்டுதான் பதில் அளிக்க முடியும் என நழுவிட்டார்.

நன்றி: தி இந்து

No comments:

Post a Comment