Labels

Thursday, September 19, 2013

கண்தானே போச்சு.. கடல் வத்திப் போகலியே..!


வலையுடன் தொழிலுக்குச் செல்லும் அருள் ஜேசுராஜ்
வழக்கமாய், இலங்கை கடற்படையால் துரத்தியடிக்கப்பட்டு துன்பப்பட்டு வரும் மீனவர்களின் கதைகளையே கேட்டுச் சங்கடப்பட்டுக் கிடப்பவர்களுக்கு, மீனவர் அருள் சேசுராஜின் சுயசரித்திரம் நம்பிக்கை தரும் உத்வேக டானிக்! 


ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் இருந்து 2 கிலோ மீட்டரில் இருக்கும் ஓலைக்குடா மீனவக் கிராமத்தைச் சேர்ந்தவர் சேசுராஜ். 65 வயதான இவர், கண் பார்வை இழந்த ஒரு மாற்றுத் திறனாளி. அவரைச் சந்திக்கச் சென்றபோது, "மொதல்ல ஒரு இளநீரைக் குடிங்க.. அப்புறமாக பேசுவோம்" என்று உபசரித்துவிட்டு தன் கதையை கூற ஆரம்பித்தார். 

"மனைவி மேரி. இரண்டு மகனாரும், ஒரு பெண்டும் எனக்கு. மூத்த மகன் அந்தோணி 15 வருசம் ராணுவத்துல இருந்துட்டு, இப்ப எங்களோட வந்திருக்கான். சின்னப் பையன் திருத்துவம் என்னோட கடல் தொழிலுக்கு வர்றான். மகளை ஒரு மகராசனுக்கு கட்டிக் குடுத்துட்டேன். 42 வயசுல எனக்கு திடீர்னு ரெண்டு கண்ணுலயும் பார்வை போயிருச்சு. எம்புட்டோ வைத்தியம் செஞ்சு பாத்தோம்; எந்தப் பலனும் இல்ல. எம்.ஜி.ஆர். முதலமைச்சரா இருந்தப்ப தீவுக்கு வந்துருந்தாரு. அவருக்கிட்ட என்னோட கொறைய சொல்லி மனுக் குடுத்தேன். பாந்தமா விசாரிச்சவரு, மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு கடுதாசி குடுத்து டாக்டர்களை பாக்கச் சொன்னாரு. அவங்க என்னோட கண்ணை பரிசோதிச்சுப் பாத்துட்டு, ‘இனிமே பார்வை வர்றதுக்கு வாய்ப்பே இல்ல’ன்னு ஒதட்ட பிதுக்கிட்டாங்க. 

நல்லா இருந்த மனுஷனுக்கு திடீர்னு கண் தெரியாம போனா என்ன செய்யமுடியும்? நானும் அப்படித்தான் இடிஞ்சு போனேன். என்னைப் பத்துன கவலையைவிட இந்தப் புள்ளைகள பத்துன கவலைதான் அப்ப எனக்கு. கடலை விட்டால் எனக்கு வேறெதுவும் தெரியாது. அதுவும், அந்த ஆண்டவருக்கு புடிக்காம போச்சே... கண்ணைப் பறிச்சுட்டாரேன்னு கலங்கிப் போனேன். கதியற்றவனுக்கு கடவுள் தானே துணை. மேரியை கூட்டிக்கிட்டு, வேளாங்கண்ணிக்கு போனேன். அங்க போயி மாதா மடியில படுத்து என் குறையை சொல்லி அழுதேன். எத்தனை நாளைக்குதான் அப்புடி இருக்க முடியும்? வயிறுன்னு ஒண்ணு இருக்கே.. பிச்சை எடுக்கலாமான்னு கூட தோணுச்சு. கடலை தவிர யாருக்கிட்டயும் எதற்காகவும் கையேந்தி பழக்கமில்லாத எனக்கு தன்மானம் இடம் தரல. பிச்சை எடுக்குற நெலமைக்கு என்னைய கொண்டுபோயிடாதீங்கம்மான்னு அந்த மாதாக்கிட்ட மன்றாடினேன். 

அப்புறமாத்தான் உரைச்சுது.. நமக்குதானே கண்ணு தெரியல. கடல் இன்னும் வத்திப் போகாமத்தானே இருக்கு. நாப்பது வருசமா பழகுன கடலும் கரையும் மறந்து போகுமான்னு நெனச்சேன். ஒரு வைராக்கியத்தோட, மேரியும் நானும் அங்கருந்து ஓலைக்குடாவுக்கு திரும்பினோம். மறுநாள், என்னோட படகுல தனி ஆளா போயி, நானே சொந்தமா வலை வீசினேன். அந்த மாதா எங்கள கைவிடல. நல்லாவே மீன்பாடு இருந்துச்சு. மொதல்ல கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா, போகப் போக பழகிருச்சு" கண்களில் நீர்கட்டுகிறது அருள் ஜேசுராஜுக்கு. கண்ணீரை துடைத்துக் கொண்டு தொடர்ந்தார். 

"பார்வை நல்லா இருந்தப்ப கச்சத்தீவு வரைக்கும் போயி அங்கேயே தங்கி இருந்து மீன் பிடிப்போம். சில நேரங்கள்ல, இலங்கை மீனவர்களோட சேர்ந்தும் மீன் பிடிச்சிருக்கோம். கடலில் ஏதுங்க எல்லை? எல்லாம் இந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்துனது. சொகுசான வாழ்க்கை வாழறவங்களுக்கு மீனவர்களோட வாழ்க்கை தெரியாது. இந்தத் தீவுல மீன் வளம் குறைஞ்சுப் போச்சு. உலுவை, சிறாட்டி, வேலா இந்த மீனுங்களை எல்லாம் நீங்கள் பார்த்திருக்கீங்களா? இதெல்லாம் அந்தக் காலத்து ரகம். இப்ப இதை எல்லாம் பாக்கமுடியல! இந்த நிலைமையிலயும் என்னால கடலுக்கு போறத நிறுத்த முடியல. காசுக்காக சொல்லல.. கடலுக்கும் எங்களுக்கும் உள்ள உறவு அப்படி. ஆனா, நாளைக்கு, என்னோட பேரப் புள்ளைங்க கடலுக்குப் போவாங்களான்னே தெரியல?" அருள் முகத்தில் ஆயிரம் கவலை ரேகைகள்!
"ஆபத்தான இந்த கடலை மட்டும் நம்பி இருக்காம மாற்றுத் தொழிலை கத்துக்கலாமே?" என்று கேட்டதற்கு, "உண்மைதான் தம்பி.. எப்பவுமே, இருக்கிறத விட்டு பறக்கிறதுக்குதான் நம்ம எப்பவுமே ஆசைப்படுறோம். 

ஒரு காலத்துல விறால், சிங்கி, கணவாய் மீன்கள் வலையில சிக்குச்சுன்னா கடல்லயே திருப்பிக் கொட்டிருவோம்; அதை சாப்பிடவும் மாட்டோம். ஆனா, இப்ப காசுக்கு ஆசைப்பட்டு, எல்லாத்தையும் வழிச்சு அள்ளி வெளிநாட்டுக்கு ஏத்துமதி பண்ணிடுறாங்க. இதனால மீன்வளமே குறைஞ்சி போச்சு. 

எங்க காலம் முடிஞ்சிருச்சு, இனிமே போயி புதுசா நாங்க என்ன தொழிலை படிக்கிறது. கடைசி வரைக்கும் நமக்கு உப்புக்காத்தும் பட்ட கஞ்சியும்தான்னு ஆகிப் போச்சு" அர்த்தமாய் சிரித்தார் அருள் ஜேசுராஜ்!

No comments:

Post a Comment