Labels

Tuesday, June 4, 2013

ராமேஸ்வரம் வரலாற்றுக் கோடுகள்

ராமேஸ்வரம் தீவின் வரலாற்று வரைபடத்தை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். அதற்கான சிறிய பதிவு இது :-)


கி.பி 1552 போர்ச்சுக்கல் நாட்டு பாதிரியாரான பிரான்சிஸ் சேவியர் என்பவர் ராமேஸ்வரம் கரையூர், வேர்க்கோடு பகுதிகளில் வாழ்ந்து வந்த கிறிஸ்த்துவ மதத்தை தழுவிய மீனவர்களுக்காக தேவாலயம் ஒன்றை கரையூர் கடற்கரை பகுதியில் அமைத்தார்.

கி.பி 1628 ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த ராமநாதபுரம் மன்னர் கூத்தன் சேதுபதி கோயில் யானை மீதுஅமர்ந்து நகர்வலம் வந்தபோது தமது வலிமையை நிருபித்துக் காட்ட மன்னர் அமர்ந்து இருந்த யானையின் வாலைப் பிடித்து  யானை மேலும் நகரவிடாமல் நிறுத்திவிட்டடர். முத்து விஜயன் சேர்வை என்பவர். அன்பளிப்புகள் வழங்கி அவரைப் பாராட்டிய சேது மன்னர் அவருக்கு நாள்தோறும் கோயிலில் இருந்து உணவு வழங்க உத்திரவிட்டார் என சென்னை அருங்காட்சியத்தில் உள்ள செப்பேடு கூறுகிறது.

கி.பி. 1640 தமிழகத்தின் நிலப்பரப்பை ராமேஸ்வரம் தீவுடன் இணைப்பதற்க்காக முதன்முறையாக மண்டபம் தோணித்துறைப் பகுதியையும் பாம்பன் தீவின் தெற்குப் பகுதியையும் இணைப்பதற்காக சுமார் 2 கல் தொலைவு நீளத்தில் கடலில் மேலாக பாலம் ஒன்றிணை திருமலை நாயக்கரது தளபதி இராமப்பையன் அமைத்தான்.

அக்காள் மடம்

கி.பி 1725 ராமநாதபுரம் சேதுபதி மன்னரால் மண்டபம் தோணித்துறைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் சேது யாத்திரையாக வரும் பயணிகளது வசதிகளைக் கண்காணிப்பதற்காக சேதுபதியின் மருமகன் தண்டத்தேவர் என்பவர் பாம்பன் ஆளுனராக நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இவர் மன்னரது அனுமதியில்லாமல் பயணிகளிடம் ஒரு வரி வசூலித்து வந்ததைக் கேள்விப்பட்டு அந்தச் செயலை துரோகமாகக் கருதி தண்டத் தேவருக்கு மரண தண்டனையை வழங்கினார் சேதுபதி மன்னர். சேதுபதி மக்களும் தண்டத் தேவரது மனைவிகளான சீனி நாச்சியார், லெட்சுமி நாச்சியார் என்ற இரு பெண் மக்களும் தமது கணவரது மரணத்தை அறிந்து தீக்குளித்தனர். பின்னர் சிவகுமார முத்து விஜய ரெகுநாத சேதுபதி மன்னரால் அந்தப் பெண்மணிகள் நினைவாக சேதுப்பாதையில் மடங்கள் அமைக்கப்பட்டன. அவையே இன்று தங்கச்சிமடம்,அக்காள் மடம் என்ற ஊர்களாக அமைந்துள்ளன.

கி.பி 1744 குமார முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னர் ராமேஸ்வரத்தின் தெற்கே அமைந்துள்ள ஆபில் காபில் என்ற தர்ஹாவின் பராமரிப்பிற்காக இராமநாதபுரம் வட்டத்தில் உள்ள புதுக்குளம் என்ற கிராமத்தை சர்வ மானியமாக வழங்கி செப்பேடு ஆணை அளித்தார்.


 
நெடுஞ்சாரப்பா தர்ஹா


கி.பி 1780 ராமேஸ்வரம் தீவில் அரியான்குண்டிற்கு முன்னதாக உள்ள ஏகாந்த இராமர் கோயிலை அடுத்து முஸ்லிம் ஒருவரது அடக்கஸ்தலம் உள்ளது. இதனை நெடுஞ்சாரப்பா தர்ஹா என மக்கள் அழைத்து வருகின்றனர். இந்த தர்ஹாவை அமைக்க இராமேஸ்வரம் கோவில் ஆதின காத்தர்-இராமநாதபுரம் பண்டாரம் உதவினார் (ஆதாரம்: அந்த இடத்தில் உள் ள கி.பி 1780ம் ஆண்டு கல்வெட்டு)

கி.பி. 1795 கி.பி மன்னர் முத்து இராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி அவரது ஆட்சிக்காலத்தில் கிழக்கு கடற்கரையில் தமது நாட்டில் இறக்குமதி, ஏற்றுமதியாகும் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைக்கப் 15 பெரும் தானியக் களஞ்சியங்களைக் கிழக்கு கடற்கரையில் அமைத்தார். அவைகளில் ஒன்று ராமேஸ்வரம் தீவில் சுடுகாட்டாம்பட்டி அருகே அமைந்து இருந்தது. அதில் ஒரே சமயத்தில் 5000 கலம் தானிங்களை சேகரித்து வைக்க முடியும்.

கி.பி 1795 சேதுபதி சீமையைக் கைப்பற்றி ஆங்கிலேயரது ஆட்சியை ஏற்படுத்திய பிறகு இலங்கையில் டச்சக்காரருக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் ஆங்கிலப்படை அணிகளுக்கு உதவ ராமநாதபுரத்தில் இருந்து ஆங்கிலப் படையணிகள் தளபதி பௌஷேர் தலைமையில் பாம்பன் துறையிலிருந்து 13.11.1795 இலங்கை கல்பிட்டியாவிற்கு அனுப்பப்பட்டது.

1799 சேதுபதிச் சீமையை ஆக்கிரமித்து ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் ராமேஸ்வரம் தீவில் கிடைக்கும் சாயவேர்களையும் சங்குகளையும் சேகரித்துக் கொள்ளும் உரிமையை ஏலத்துக்கு விட்டதில் குடும்ப லிங்கம் பிள்ளை என்பவர் சங்குத் தொகையை (ஓராண்டிற்கு) 21.735 ஸ்டார் பக்கோடா பணத்திற்கும், சாயவேர் உப்புக்குத்தகையை 14.5000 ஸ்டார் பக்கோடா பணத்திற்கும் எடுத்தார்.

கி.பி 1804 ஜயார்ஜ் வாலண்டைன் என்ற இங்கிலாந்து நாட்டுப் பிரமுகர் இலங்கையைச் சுற்றிப்ப பார்த்துவிட்டு கப்பல் மூலமாக தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 25.01.1804ல் வருகை தந்தார். ராமேஸ்வரம் கோயிலுக்கு அவரது வருகையின்போது அவருக்கு அப்போழுது ஆதினகர்த்தராயிருந்த பதினான்கு வயது சின்ன இராமநாத பண்டாரம் வரவேற்பு வழங்கியதையும் அதன் தொடர்பாக வரவேற்பு வழங்கியதையும் அதன் தொடர்பாகத் கோயில் தேவதாசிகள் சதிர் ஆடியதையும் அவரது பயண நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கி.பி 1810 ராமேஸ்வரம் கோயில் சேது இராமநாத பண்டாரம் கோயில் சடங்குகளை முறைப்படி நடத்தவில்லை என்று ராமநாதபுரம் ஜமீன்தாரிணி மங்களேஸ்வரி நாச்சியார் ராமநாதபுரம் ஜில்லா கலெக்டருக்குப் புகார் அனுப்பினார்.

கி.பி 1822 படகுப் போக்குவரத்திற்கு ஏற்றதாகப் பாம்பன் கால்வாயை மாற்றியமைக்க ஆங்கில கிழக்கு இந்தியக் கம்பெனியாரது பொறியாளர் சர். ஆர்தர் காட்டன் என்பவர் கி.பி 1822ல் அளவீடுகள் மேற்கொண்டார். இந்தக் கால்வாயை அகலப்படுத்தி ஆழப்படுத்தும் பணி கி.பி 1838ல் தொடங்கியது.

கி.பி 1824 தனுஷ்கோடிக்கும்-தலைமன்னாருக்கும் இடையிலான கடல்வழி வருகின்ற இலங்கை நாட்டுத் தபால்கள் அவைகளின் போக்கு காரணமாகப் படகுப் போக்குவரத்தைப் பாதித்துக் காலதாமதம் ஏற்படுவதை ஆராய பதிவேடு ஒன்றை தனுஷ்கோடி துறைமுகத்தில் பராமரிப்பது என அரசு முடிவு செய்தது.

கி.பி 1825 எலிசா என்ற பெயர் சூட்டப்பட்ட சரக்கு கப்பல் ரூ.1.20.000 மதிப்புள்ள சரக்குகளுடன் பாம்பன் கடல்வழிப்பாறையில் மோதி 10.01.1826ல் நீரில் ஆழ்ந்து விட்டது. 14 படகுகளும், தண்டல், லஸ்கர், கூலிகள் என 308 ஆட்களும் முனைந்து முயற்சித்து அந்தக் கப்பலை மிதக்க விட்டனர். இதற்கான செலவு ரூ. 130 அணா 13 மட்டுமெ.


கி.பி 1826 பாம்பன் பாறையில் படகுகளை கடத்திவிடும் பணியில் இராமநாதபுரம் சடைக்கள் சேதுபதி காலம் முதல் ஈடுபட்டிருந்த ஆவுல் நெய்னா அம்பலம் என்பவரது உரிமையை ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியார் பறித்து அந்தப் பணிக்கு ஒருவரை அவர்களே நியமித்தனர். அந்தப்பணி மூலம் கிடைக்கும் வருவாயையும் கம்பெனியாரே அனுபவிக்கத் தொடங்கினர்.

கி.பி 1828 மன்னார் வளைகுடாக் கடலில் முத்துக்குளிக்கும் சேதுபதி மன்னர்கள் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, திருப்பெருந்துறை கோயில்களில் முத்துச் சிலாப நாட்களில் தத்தமது கோவில்களுக்கு இரண்டு தோணிகளை வைத்து முத்துக் குளிக்கும் உரிமையினை வழங்கி இருந்தனர். ஆனால் ஆங்கிலேயரது இலங்கை அரசாங்கம் ராமேஸ்வரம் கோயில் தோணிகளுக்கு முத்துக்குளிக்க அனுமதி மறுத்துவிட்டது 20.06.1828

விவேகானந்தர் வருகை

கி.பி 1897 அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற அனைத்துலகச் சமயங்களின் பேரவையில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட விவேகானந்தர் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தாயகம் திரும்பும் பொழுது பாம்பன் துறைமுகத்தில் 22.01.1897ல் கரை இறங்கினார்.  தமது அமெரிக்கப் பயண வசதிகளை செய்து கொடுத்த ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பாம்பனுக்கு வந்தார் விவேகானந்தர்.

கி.பி 1913 பாம்பன் ரயில்பாலம் மண்டபத்திற்கும்,பாம்பனுக்கம் இடையில் அமைக்கப்பட்டது.

கி.பி. 1950 ராமேஸ்வரம் கோயிலின் நிரந்தர தர்மகர்த்தாவான ராமநாதபுரம் சேதுபதி மன்னர் ராமேஸ்வரம் கோவிலுக்கு வருகை தரும் பொழுதெல்லாம் அவரைப் பாம்பன் ரயில்நிலையத்திலும் பின்னர் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலும் நாதஸ்வர மங்கள இசையுடன் வரவேற்கும் முறை இந்த ஆண்டு நிறுத்தப்பட்டது.

தனுஷ்கோடி 1964க்கு முன்னர்

கி.பி 1964 தொடர்ந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் தீவுப் பகுதியை தாக்கிய மழை, புயல் காரணமாக தனுஸ்கோடி துறைமுகம் 23.12.1964 நள்ளிரவில் கடலில் முழ்கியது. அந்த தீவின் மேற்கு பகுதியான பாம்பனில் அமைக்கப்பட்டிருந்த இரும்பினலான பாலமும் சிதைவடைந்தது.


கி.பி 1988ல் பாம்பன் சாலைப் பாலம் திறக்கப்பட்டது.

2 comments:

Unknown said...

நல்ல அறிய தகவல்கள்...வாழ்த்துகள்...

Unknown said...

நல்ல அறிய தகவல்கள்...வாழ்த்துகள்... SM kasim

Post a Comment