Labels

Wednesday, September 10, 2014

தற்கொலைகளை கொண்டாடுபவரா நீங்கள்?


செப்டம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு தினம்

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் தற்கொலை உலகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தற்கொலையில் இறப்பவர்களின் எண்ணிக்கை, கொலைகள் மற்றும் போர்களின் மூலம் உயிரிழப்பவர்களைக் காட்டிலும் அதிகம். உலகில் வாழும் 5 சதவிகிதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர். இந்த கட்டுரையை நீங்கள் வாசித்து முடித்திருக்கும் தருவாயில் உலகெங்கிலும் 5 பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். நான் தடுத்து நிறுத்தியதாக கருதும் இரண்டு தற்கொலைகள் பற்றிய பதிவு இது...

முதலில் தோழிமாவை அவளது பாய் பிரண்டுடன் தான் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதலாம் ஆண்டு இதழியல் புத்தாக்கப் பயிற்சி பட்டறையின் போது சந்தித்தேன். அதென்ன தோழிமா பெயரே வினோதமாக இருக்கிறதே என்று நீங்கள் வினவலாம். எனது உம்மா (தாயார்) தனது தோழிகளை மற்றவர்களுடன் அறிமுகப்படுத்தும் போது தோழிமா என்று தான் கூறுவார்.

இவளோ அண்ணன் என்று மிக நெருக்கமாகி விட்டார். பயிற்சி முடிந்த இலங்கை சென்ற பின்னரும் தொடர்பில் இருந்தார். ஒருமுறை கைபேசியில் என்னை தொடர்பு கொண்டபோது அவளது பாய் பிரண்ட் பற்றி நான் அறிந்தவற்றை இவளது நலன் கருதி அப்படியே சொல்லி விட்டேன். அவளோ என்னை ஏகமனதாய் திட்டி தீர்த்து விட்டு கைபேசியில் இணைப்பை துண்டித்து விட்டாள். அடுத்து ஐந்து நிமிடத்தில் என்னை அன் பிரண்ட் ஆக்கி விட்டாள்.

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் பேஸ் புக்கில் பிரண்ட் ரெக்குவஸ்ட் அனுப்பியிருந்தாள். நான் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவள் என்னை திட்டிய ஒவ்வொரு வார்த்தைகளும் படுபயங்கரமானவை.

மறுநாள் பேஸ்புக் இன்பாக்சில் அவளிடம் ஒரு செய்தி. நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று...

நான் சிரித்துக் கொண்டே... பிரண்ட் ரெக்குவஸ்டை அப்ரூவல் செய்யவில்லை என்றா சாகப் போகிறாய் என மறுமொழி அளித்தேன்.

சாரி அண்ணா. நீ அன்றே அந்த நாயைப் பற்றி சொன்னாய் அவன் என்னை நல்லா யூஸ் பண்ணி விட்டு ஏமாற்றிவிட்டுச் சென்று விட்டான். நான் உன்னை அசிங்கமா திட்டி விட்டேன் மன்னித்து கொள்ளும்.

நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். என்னை யாரும் தடுக்க முடியாது. சாவதற்கு முன்னாடி உமக்கு சாரி சொல்லனும் என்று தோன்றியது, என்றாள்.

அடுத்த கணம் என்ன நடக்காது என்று யாருக்கும் தெரியாது. இவள் வேறு சாவதற்கு முன்னாடி எனக்கு தான் மெசேஜ் போடனுமா? இப்படி மாட்டி விடுறாளே இந்த மனுஷி என்று எனக்கு டென்சன் எகிறியது.

என்ன நடந்தாலும் சரி பேசிப் பார்ப்போம் என்று '' நான் உன்னை மன்னிக்க மாட்டேன். உன் மீது சரியான கோபத்தில் இருக்கிறேன்''

நீ தற்கொலை எப்படி செய்து கொள்ளப் போகிறாய் தூக்கா? விஷமா? கிணறு? கடல்? ரயில் தண்டபாளம் என்று இழுத்தேன்....

யாழ் தேவி ரயில் இப்போது பாவணையில் இல்லை, என்றாள் கொஞ்சம் சிரித்தவளாக.

என்னுடைய கைபேசிக்கு வருமுடியுமா? நீ தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னாடி உன் குரலை கேட்கனும் போல இருக்கு, என்றேன்.

என்ன நக்கலா? நீர் என் மனதை மாற்றி விடுவாய், என்றாள்.

உன் மனதையெல்லாம் மாற்ற மாட்டேன். நீ என்னை அன்று திட்டினாய் அல்லவா பதிலுக்கு உன்னை திட்டிக் கொள்கிறேன் என்றதும் கொஞ்சம் மனதிறங்கி வந்தாள்.

சற்று நேரத்தில் என் கைபேசி சிணுங்கியது...

மறுபடியும் சாரி அண்ணா.

அமைதியாகப் பேச்சுக் கொடுத்தேன். நான் அன்றே உன்னை எச்சரித்தேன். பதிலுக்கு திட்டி தீர்த்து விட்டாய். அன்று செய்த தவறை விட மிகப் பெரிய தவறை இனி நீ செய்யப் போகிறாய். உன்னோடு தற்கொலை இந்த உலகிற்கு எவ்விதமான செய்தியும் தரப்போவதில்லை. நாளை உதயன் நாளிதழில் காதல் தோல்வியில் யாழ்பாணப் பல்கலைக் கழக மாணவி தற்கொலை என்று சிறிய செய்தி வருப் போகிறது அவ்வளவு தான். இதனால் உன் குடும்பத்தினர், உன் உண்மையான நண்பர்கள் என அனைத்து தரப்பினரையும் இழக்கப் போகிறாய். நான் பேச பேச சப்தமாக அழ ஆரம்பித்து விட்டாள். அவளை அழவும் அனுமதித்தேன். யார் தோளிலாவது சாய்ந்து அழ வேண்டும் போல் உள்ளது அண்ணா என மறுபடியும் அழுகாச்சிப் படலம்.

திடிரென்று மகள் அழுகை சப்தம் கேட்டு எனது தோழிமாவின் தந்தை ஓடோடி வந்தார். வந்தவர் மகளின் கைபேசியை வாங்கி என்னை யார் என்ன ஏது என்று பாரபட்சமின்றி மகளை காட்டிலும் அதிகமாக என்னை திட்டி தீர்த்தார். அப்பனுக்கு மகள் தப்பாது பிறந்திருக்கின்றாள் என நினைத்தேன்.
கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அடுத்த அரைமணி நேரம்.

 என்னாச்சு...

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டோமோ என தோன்றியது.

மறுபடியும் இலங்கையில் இருந்து பரிச்சயமில்லாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.

சாரி தம்பி மன்னித்துக் கொள்ளுங்கள் என்று தோழிமாவின் அப்பா இந்த முறை அழைத்தார்.

அமைதியாக அவளிடம் தமது மகளைப் பற்றி புரியவைத்தேன். ஒரு வழியாக தோழிமாவின் தற்கொலை முயற்சியும் கைவிடப்பட்டது.

இன்று தோழிமா லண்டன் பல்கழைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறாள்.

கடந்த மாதம் எனது பிறந்த நாளை நினைவு வைத்து லண்டனில் இருந்து ஒரு புத்தகமொன்றை பரிசாக அனுப்பியிருந்தாள்.

---

ராமேஸ்வரத்தில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள். இது தான் தருணம் என்று உறவினன் ஒருவன் தற்கொலை முயற்சியாக மூட்டை மருந்தை குடித்து தொலைத்து விட்டான். அன்னாரின் மனைவியின் ஒப்பாரி சத்தம் கேட்டு விசாரித்ததில் கணவன்-மனைவி சண்டையில் கணவர் மருந்தை குடித்து தன்னை மாவீரன் என்று நிறுபித்த கதை தெரிந்தது.

உடனெ அவனை ஆட்டோவில் ஏற்றி புயலைப் போட்டி போட்டுக் கொண்டு ராமநாதபுரம் மருத்துவமனை நோக்கி விரைந்தோம். நாங்கள் பயணித்த ஆட்டோவில் நான், எனது தம்பி மற்றும் ஆட்டோ ஓட்டியாக மாறிய என் மாமா.

மின்னல் ஒளியில் சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதை தெளிவாகப் பார்க்க முடிந்தது நாங்கள் பயணித்த ஆட்டோவோ வழியில் பெட்ரோல் இல்லால் நின்றுவிட்டது. வேறு வழி இல்லாமல் ஆட்டோ தள்ளிக் கொண்டே எவ்வளவு தூரம் சென்றோம் என்று நினைவில்லை.

தூரத்தில் ஒரு பெட்ரோல் நிரப்பும் நிலையம். ஆனால் அவசரமாக ஆட்டோவில் ஏறிய மூவர் கையிலும் பணம் கிடையாது. நானோ கட்டிய சாரோத்தோடு ஆட்டோவில் ஏறிவிட்டேன். சரி மருந்து குடித்த மாவீரன் பாக்கெட்டில் ஏதாவது இருக்கின்றதா என்று ஐடியாவுடன் என் மாமன் அவனது பையை நோட்டமிட வெளிநாட்டு சிகரட் பாக்கெட்டும், தீப்பெட்டியும் தான் இருந்தது. பெட்ரோல் நிரப்பும் நிலையத்தில் விசயத்தை சொல்லி பெட்ரோலை காசில்லாமல் நிரப்பிக் கொண்டு ராமநாதபுரம் சென்றோம்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையெ வெள்ளத்தில் முழ்கி இருக்க இரவு நேர மருத்துவர் அரிதாக அன்று டூட்டியில் இருந்தார். உடனெ அவர் சில மருத்துவ ரப்பர் டுயுப் வஸ்துகளை எழுதிக் கொடுத்து மருந்தகத்தில் வாங்கி வரச் சொன்னார். மருந்தகத்திலும் கடன் வைத்து காரியத்தை முடித்தோம். கடைசியாக வீராதி வீரன் வீரபத்திரன் பேரனின் மூக்கில் ரப்பர் டுயுப்பை சொறுகி அவன் உட்கொண்ட மூட்டை மருந்தை எல்லாம் உறிஞ்சி எடுத்தார்கள். இந்த தருணத்தில் நான்கைந்து பெருச்சாளி வேறு அவனது உடல்நலம் விசாரிக்க வர செவிலியர் ஒரு கட்டையை தரையில் தட்டி அவற்றை விரட்டினார்.

ஒரு வழியாக தற்கொலை செய்து கொண்ட கதாநாயகன் அபாயகட்டத்தை தாண்டி உயிர் பிழைத்தான். இந்த அதிவீர பராக்கிரம சாகசங்கள் நடந்து முடியும் போது அதிகாலை 3.30 நெருங்கி விட்டது.

நாங்கள் மூவரும் ஏற்கெனவே குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தோம். என் மாமன்காரன் முன்னதாக மாவீரனின் சட்டைப்பையில் இருந்த சிகரெட்டின் வாயிலாக குளிரை தணிக்க துவங்கினார். எனக்கும் சகோதரனுக்கும் தேநீர் சாப்பிட வேண்டும் ஆனால் கைசில் சுத்தமாக காசும் கெடையாது. சற்று  நேரம் நீடித்தால் மாவீரனுக்கு அருகெ எனக்கும் ஒரு படுக்கை போட வேண்டிய சூழல்.

இந்த நேரத்தில் என் சகோதரன் மாவீரன் அனுமதிக்கப் பட்டிருந்த படுக்கைக்கு அருகெ முன்னதாக தற்கொலைக்கு முயன்று இதெ மருத்துவரால் காப்பாற்றப்பட்ட மற்றும் ஒரு மாவீரரிடம் என் சகோதரன் கைமாற்றாக 100 ரூபாயை தேற்றிவிட்டான். புயல் ஒரு வழியாக ஓய்ந்த தருணத்தில் இருவரும் ஒரு கடையில் தேநீர் சாப்பிடும் போது அதிகாலை 5-யை கடந்து விட்டது.

பொழுது விடிந்ததும் உற்றார், உறவினர் நண்பர்கள் மருத்துவமனைக்கு படையெடுக்க, ஒப்பாரியுடன் வந்த மாவீரனின் மனைவியிடம் மாவீரனை ஒப்படைத்து விட்டு கிளம்பினோம்.

ஆனால் இன்று அந்த மாவீரனுக்கு மூன்று அழகிய குழந்தைகள் இருக்கின்றார்கள்.  தற்கொலையும் பிடிக்கவில்லையாம். ஏன் இந்த திடீர் மனமாற்றம் என நான் கேட்கவே வெட்கப் படுகின்றான். தொலைகின்றது ஏன் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு என்ன பிரச்சனை என்று கேட்டதற்கு மனைவியின் நகைகளை வைத்து மாவிரர் சீட்டு விளையாடி தோற்றிருக்கிறார். மனைவி அதைப் பற்றி கேட்கவே இந்த தற்கொலை முயற்சி. ஏன்டா இந்த சனியனை காப்பாற்றினோம் என்று வெகுநாட்களுக்கு பின்னரே யோசிக்க தோன்றியது.

No comments:

Post a Comment