Labels

Friday, February 10, 2012

சினிமா தான் கொன்றதா? அலசுகிறார்கள் கல்வியாளர்கள்.

சென்னை பாரிமுனையில் உள்ள பள்ளியில் தம் ஆசிரியரையே  மாணவன்  கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் இன்று பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைப் பற்றி பிரபல கல்வியாளர்களை தொடர்பு கொண்டு கருத்துகளை கேட்டேன்.

பேரா. முனைவர். ராமு மணிவண்ணன். ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார். தில்லி பல்கலைக்கழகத்தில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். இப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல்துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். இயற்கையுடன் இணந்த இலவசக் கல்வியை வேலூர் மாவட்டத்தில் வழங்கி வருபவர்.

(அவரிடம் 09-02-2012 அன்று ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிரியை கொலை செய்த சம்பவம் குறித்து கருத்து கேட்டேன்)

''இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்பதை விட, மிகவும் வறுந்தத்தக்க செயலாகும். எந்தளவிற்கு சினிமா போன்ற ஊடகக் கலாச்சார சீரழிவுகளினால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு கொலை செய்யும் அளவிற்கு அது தூண்டியுள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

நமது பள்ளி சூழ்நிலைகளில் ஆசிரியர் என்றால் பயம் என்ற உணர்வு கூட வெறிச்செயலுக்கு காரணமாக இருக்கின்றது.

மேலைநாடுகளில், பள்ளிகளில் மாணவ-ஆசிரியர்களுக்கு மனநல ஆலோசகர்களை நியமித்து இருப்பார்கள். அது போல ஆலோசகர்களை மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நியமிக்க வேண்டும்'' என்றார்.

---------------


அ. மார்க்ஸ் 37 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். ஆசிரியர் இயக்கங்களில் பல்வேறு மட்டங்களிலும் பொறுப்புகளில் இருந்து செயல்பட்டு வருபவர்.


இலக்கிய, அரசியல் மற்றும் மனித உரிமைக் களங்களில் கடந்த 35 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்.


இதுவரை 50க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்.


சுருங்க கூறின் இவர் முழுநேர எழுத்து மற்றும் மனித உரிமைப் பணியாளன்.

பேரா. மார்க்ஸ் அவர்களிடம் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஆசிரியரை கொலை செய்த சம்பவம் குறித்து கருத்து கேட்டேன்.

இந்த விடயத்தை குறிப்பாக அந்த மாணவனுக்கும் ஆசிரியைக்கும் நடந்த பிரச்சனையாகப் பார்க்கக் கூடாது. நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு ஒட்டுமொத்த சமூகமும் தான் பொறுப்பேற்க வேண்டும். 


நமது வாழ்க்கையில் அரசியலில் ஊடகங்களில் வன்முறை என்பது மிகப்பெரிய அளவில் பெருகி இருக்கின்றது. இது இளம் உள்ளங்களில் இதுபோன்ற முயற்சிகளுக்கு உந்துதலாக அமைந்துள்ளது. 


ஆசிரியர்களைப் பொறுத்தமட்டில், எந்தப் பள்ளியிலும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே கூடுதலான வேலைப் பணிகளை அவர்கள் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இதன்மூலம் பொறுமையிழந்து மாணவர்களிடையெ கோபமாக நடந்து கொள்ளும் வாய்ப்பு அதிகமாக விடுகின்றன. 


இந்தச் சூழலில் மாணவர்கள் இதுபோன்ற நிலை எடுப்பது என்பதற்கான சமூக பின்னணிகளை ஆராய்ந்து, அதை தடுப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். 


வயது வந்த மாணவர்களை மற்ற மாணவர்கள் முன் அவமானப்படுத்துவது, அவர்களை கோபமூட்டக் கூடிய அளவிற்கு நடந்து கொள்வதை ஆசிரியர்கள் தவிர்க்க வேண்டும். 


அதே நேரத்தில் மாணவர்களுக்கும். ஆசிரியர்களுக்கும் உரிய அமைதியான சூழலை ஏற்படுத்தி தரவேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கின்றது.


சினிமா மற்றும் இதர ஊடக தொடர்பு சாதனங்கள் வன்முறையை உண்டாக்க கூடிய படைப்புகளை வெளியிடக் கூடாது.


இதுபோன்ற தொலைநோக்கிலான நடவடிக்கை மூலமாக தான் இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்'' என்றார் பேரா. மார்க்ஸ்.

------------- 


இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். புரட்சிகர சிந்தனையை வாழ்க்கையாகவே வரித்துக்கொண்ட இவர், பெயரையே இன்குலாப் எனப் புனைந்து கொண்டார். 30 ஆண்டுகள் தமிழ் பேராசிரியராக பணியாற்றியவர்.

சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் என சகல தளங்களிலும் நிகழும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இவரது குரல் உரத்து ஒலிக்கிறது.


இவரது எழுத்துகளுக்காகக் கிடைத்தது விருதுகளோ பரிசுகளோ அல்ல; அச்சுறுத்தல்களும், நள்ளிரவுக் கைதுகளும் தான். இவரும் தனது படைப்புகளுக்காக எதிர்பார்த்திருப்பது விருது களையோ, பரிசுகளையோ அல்ல; சமூக மாற்றத்தைத்தான்.


பேரா. இன்குலாப் அவர்கள் பகிர்நது கொண்ட கருத்துகள்.

இந்திப்படத்தை பார்த்து விட்டு தான் இவ்வாறு செய்ததாக அந்த மாணவன் கூறியுள்ளான். நம்முடைய திரைப்படங்கள் இதர பண்பாட்டு ஊடகங்கள் எவ்வளவு வலிமையாக இளம் உள்ளங்களை பாதித்துள்ளன. 

பொறுப்பற்ற வகையில் காட்சிகளை அமைப்பதை தான் நாம் இன்றைய திரைப்படங்களில் காண்கின்றோம்.

குறிப்பாக பெற்றோர்களை, ஆசிரியர்களை அவன் வந்துட்டான் போயிட்டான் என்று இழிவாக பேசக்கூடிய வசனங்கள் திரைப்படங்களில் வருகின்றது. அனைவரையும் மரியாதையுடனும், மனிதநேயத்துடனும் பார்க்க வேண்டும் என்பதையெ இந்த திரைப்படங்கள் சிதைக்கின்றன.

இன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவுகளை ஆராய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். மாணவ-ஆசிரியர்களின் உறவை பாசம் கலந்த ஒன்றாக உருவாக்க வேண்டும்.

மாணவர்களுக்கு ஏதெனும் குறைபாடுகள் இருக்குமெயானால் அதை சரி செய்ய வேண்டும். ஆசான் என்றால் அதிகாரப் போக்கு என்பது தவறு. ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் மனிதநேயமும், ஜனநாயமும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்'' என்றார்

9 comments:

Anonymous said...

THE OPINIONS OF THESE EDUCATIONISTS ARE THE REAL REASONS.
THE SOCIETY AS A WHOLE SHOULD WORK TOGETHER TO PREVENT RECURRENCE OF SUCH TRAGEDIES IN FUTURE.

Anonymous said...

super rafi. inkulaab saara naan paarkkanum. yeppa koottittu poringa

sivadevan said...

rafi naan siva

sivadevan said...

rafi naan siva

Rathnavel Natarajan said...

நல்ல நேர்காணல்கள்.
தொலைக்காட்சி, திரைப்படங்களின் பொறுப்பற்ற போக்கு.
நன்றி.

ராமேஸ்வரம் ராஃபி said...

நெல்லை மணோன்மணியம் சுந்தரானார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் வசந்திதேவி மற்றும் குழந்தைகள் உரிமைக்கான முன்னணி என்ற அமைப்பைச் சேர்ந்த தேவநேயன் ஆகியோரது கருத்துகளை விரைவில் பதிவிடுகின்றேன்.

ராமேஸ்வரம் ராஃபி said...

கவிஞர் இன்குலாப் அவர்களை சந்திக்க விரும்பும் தங்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள்.

Saleem Sekaran - சலீம் சேகரன் said...

நல்ல முயற்சி ரஃபி.. இன்னும் ஆழமாக செல்லுங்கள்... உங்கள் பணியை தொடருங்கள்...

J.P Josephine Baba said...

சிறந்த அலசல்!
http://josephinetalks.blogspot.in/2012/02/blog-post_11.html
என் பதிவையும் கண்டு செல்ல வேண்டுகின்றேன்.

Post a Comment