Labels

Thursday, January 12, 2012

வீட்டுக்கு ஒரு நூலகம் புத்தக கண்காட்சியில் கலாம் வலியுறுத்தல்


அன்பு நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் வணக்கம். தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக 35வது சென்னை புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு உங்களை எல்லாம் சந்திப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த 4ஆம் நாள் விழாவில் இங்கு கூடியிருக்கும் அனைவரையும் பார்க்கிறேன். பெரியோர்கள், தமிழ் ஆர்வலர்கள், நூலாசிரியர்கள், ஊடக செய்தியாளர்கள், தாய்மார்கள், இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் அனைவரையும் பார்க்கிறேன். உங்கள் எல்லோருக்கும் ஓர் வேண்டுகோள்.


என்னுடன் சேர்ந்து ஓர் உறுதிமொழி எடுத்துக்கொள்வீர்களா. எல்லோரும் என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்ப்போம்.

1. என்னுடைய வீட்டில் பூஜை அறை அல்லது பிராத்தனை இடத்திற்கு அருகில், 20 நல்ல புத்தகங்களுடன் ஓரு சிறு வீட்டு நூலகத்தை ஆரம்பிப்பேன். செய்வீர்களா 2. என்னுடைய வளர்ந்த மகன் மற்றும் மகள் 20 புத்தக நூலகத்தை, 200 புத்தக நூலகமாக மாற்ற எடுக்கும் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பேன். செய்வீர்களா

3. என்னுடைய வளர்ந்த பேரன் மற்றும் பேத்திகள் 200 புத்தக நூலகத்தை, 2000 புத்தக நூலகமாக மாற்ற எங்கள் குடும்பம் உறுதுணையாக இருக்கும். செய்வீர்களா 4. தினமும் ஓரு மணி நேரம் நானும் மற்றும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும், எங்கள் வீட்டு நூலகத்தை பயன்படுத்தி படிக்கும் பழக்கத்தை இன்று முதல் தொடர்ந்து செயல் படுத்துவோம். செய்வீர்களா

5. எங்கள் வீட்டு நூலகம் தான் எங்கள் வீட்டு பரம்பரைச் சொத்து, எங்கள் வீட்டு அறிவுக்களஞ்சியம். 6. இந்த முயற்சிதான் தமிழகத்தில் ஏற்பட போகும் அறிவுப்புரட்சிக்கு அடிப்படை ஆதாரம் ஆகும். உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

நல்ல புத்தகங்கள்,அறிவுட்டு்ம் புத்தகங்கள், இளையசமுதாயத்தின் மனத்தை நல்ல வகையில் வழி நடத்த உதவும் புத்தகங்கள் ஓவ்வொரு ஆண்டும் பல மடங்காக வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்.

இந்த 35வது சென்னை புத்தக திருவிழாவை பற்றி நினைக்கும் போது, எனக்கு என்னுடைய 10வது வயதில் இராமேஸ்வரம் நாட்கள் நினைவுக்கு வருகிறது. அப்போது எனது அண்ணன் முஸ்தபா கமால் அவர்களது நண்பர், எஸ்.டி.ஆர். மாணிக்கம் அவர்கள், தனது வீட்டில் நல்ல நூலகத்தை அமைத்திருந்தார்.

அப்பொழுது அடிக்கடி அவரது வீட்டிற்கு எனது அண்ணன் அழைத்துச்செல்வார், அப்பொழுது அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள், நான் அங்குள்ள நூலகத்தில் இருந்து புத்தகங்களை படிப்பேன். அப்பொழுது திரு சுத்தானந்த பாராதியார் எழுதிய புத்தகங்களை விரும்பி படிப்பேன். எனது அண்ணன் முஸ்தபா கமாலும், திரு எஸ்.டி.ஆர். மாணிக்கமும் அந்த கால கம்யூனிஸ்டுகள், அவர்கள் அடிக்கடி கம்யூனிசம் பற்றி விவாதித்துக்கொண்டு இருப்பார்கள், அவர்களிடம் கம்யூனிசத்தைப்பற்றி கேட்டேன்.

அவர்கள் உடனே எனக்கு காரல் மாக்ஸ் எழுதிய கேப்பிடல் என்ற புத்தகத்தின் 10 தமிழ் தொகுப்பில் இருந்து 2 புத்தகங்களை படிக்க சொன்னார்கள், அதைப்படித்ததும் அது பற்றி என்னிடம் விளக்கமாக விரிவாக எடுத்து சொன்னார்கள்.

அப்பொழுது அந்த புத்தகத்தை விரும்பி படித்தேன். அப்போது தான் கம்யூனிசத்தை பற்றி தெரிந்து கொண்டேன். அது முதல் தான் பாட புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்கும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. எனவே புத்தகம் படிக்கும் பழக்கம் ஏற்பட்டதுக்கு காரணம் எனது அண்ணனும் அவரது நண்பரும்தான், ஏப்படி அவர்கள் என்வாழ்க்கையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை இப்பொழுதும் நினைத்துப்பார்க்கிறேன்.

நண்பர்களே, உங்களை எல்லாம் பார்க்கும் போது, எனக்கு திருவள்ளுவர் சொன்ன திருக்குறள் நினைவுக்கு வருகிறது.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்து ஊறும் அறிவு
......................குறள்-396

திருவள்ளுவர் சொல்கிறார்......

மணற்பாங்கான இடத்தில் உள்ள கிணற்று நீர் மீண்டும், மீண்டும் அதன் அளவுக்கு ஏற்பச் சுரக்கும். அதுபோல மக்களுக்கு அவர்கள் கற்ற கல்வியின் அளவுக்கும், கற்ற நூலின் அளவுக்கு ஏற்ப அறிவு வளரும்.

அப்படிப்பட்ட கற்பக விருட்சகமாக, அள்ள அள்ள குறையாத, வற்றாத வளமாக மக்களுக்கு என்றும் இருப்பது புத்தகங்கள் தான். எனவே மக்களின் வளமான வாழ்க்கைக்கு, என்றும் உறுதுணையாக இருப்பதுமட்டுமல்ல, ஒரு அமைதியான, பொறுமையான, அறிவார்ந்த மற்றும் வளமான சமுதாயம் உருவாக அடிப்படைக்காரணமாக இருப்பது புத்தகங்கள் தான். எனவே உங்களிடம் "கற்பனைத்திறத்தை வளர்க்கும் புத்தகங்கள்" என்ற தலைப்பில் உரையாட இருக்கிறேன்.
இந்த வாரத்தில் நான் படித்த 2 புத்தகங்கள்

அன்பு நண்பர்களே, இந்த வாரத்தில் 2 தமிழ் புத்தகங்களை அருமையான, வாழ்க்கைக்கு மிகவும் உபயோகமான புத்தகங்களை படித்தேன். ஒன்று விவசாயத்தைப்பற்றியது, எப்படி விவசாயம் ஒரு லாபகரமான தொழிலாக மாறிஇருக்கிறது என்பதைப்பற்றியும், இன்னொரு புத்தகம், எப்படி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் நதிகளை பற்றி அறிந்து கொண்டு நம்மை வளப்படுத்த உதவுகிறது என்பதாகும்.
விவசாய இலபகரமான தொழிலாகும் என்பதில் புத்தகம்.

அதாவது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தை சேர்ந்த முனைவர் இ. வடிவேல் தலைமையிலான ஆசிரியர் குழு உழுதவன் கணக்கு (துல்லிய பண்ணையத்தில் பயிர் பாதுகாப்பு அனுபவங்கள்) என்ற ஒரு அருமையான புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். இந்த புத்தகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி, துல்லிய பண்ணைய திட்டத்தின் மூலம் கடைப்பிடிக்கப்பட்ட சிறு சிறு தொழில்நுட்ப மாற்றங்கள், பெரும் செலவை குறைத்தது மட்டுமின்றி அதிக விளைச்சலையும், நஞ்சற்ற உணவையும் பெற உறுதுணையாக இருந்தது என்பதைப்பற்றி விளக்குகிறார்.

எப்படி ஓரு புதுமையான திட்டத்தை வேளாண்மையில் புகுத்தி அதைக்கடைப்பிடிப்பதினால் விவசாயிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டுவர இயலும், அது மட்டமல்ல அவர்களின் தனிநபர் வருமானத்தை உயர்த்த முடியும் என்பதைப்பற்றி மிகவும் அழகாக எழுதியுள்ளார். அதில் 5 முக்கிய விஷயம் என்னவென்றால்.

1. உளிக்கலப்பை உழவு கோடையில் செய்தால் கோரை முழுமையாக கட்டுப்படுவதுடன், மழை நீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மட்டம் உயருதல், மழை நீர் தேங்காமல் இருப்பதால் வேரழுகல், வாடல் மற்றும் பூச்சிகள் இவற்றிலிருந்து விடுதலையும் கிடைத்தது என்கிறார். 2. சொட்டு நீர் அமைப்பு மூலம் நீர் வழங்குவதால் தேவையான நீர் மட்டுமே செடிக்கு கிடைக்கும். இதனால் நீர் விரையம் தவிர்க்கப்பட்டு களை, பூஞ்சாமை மற்றும் பூச்சிகள் வளர்ச்சி குறைக்கப்பட்டது என்கிறார்.

3. துல்லிய பண்ணையத்தில் நிலம் தயார் செய்ய உளிக்கலப்பை, கொக்கிக்கலைப்பை, சட்டிக்கலைப்பை மற்றும் உழவின் முடிவில் மேட்டுப்பாத்தி அமைப்பதாலும் மண் பொலபொலப்பாக இருப்பதாலும் முதல் பயிரின் முடிவில் அடுத்த பயிர் நடவுசெய்யலாம். குறிப்பாக தக்காளிக்கு பின்னர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், பீர்க்கன், பாகல், வெள்ளரி, நடவு செய்வதால் அடுத்த உழவு செய்யவேண்டிய அவசியம் இல்லை. இதனால் குறைந்தது ஏக்கருக்கு ரூ 2000 முதல் ரூ 2800 வரை சேமிக்கலாம் என்கிறார்.

4. களைகளை கட்டுப்படுத்தபடுவதால் 25-30 சதம் உரம் விரயமாவது தடுக்கப்பட்டு 5-10 சதம் வரை கூடுதல் மகசூல் பெற முடிந்தது. பெரும்பாலான பூச்சி, வைரஸ், பூஞ்சானங்களுக்கு களைகள் புகலிடமாக திகழும். ஆனால் துல்லிய பண்ணையத்தில் களைகள் முற்றிலும் அகற்றப்படுவதால், பூச்சி மற்றும் நோய் சேதம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியில் கட்டுக்கள் கொண்டு வரமுடியும் என்கிறார்.

5. சொட்டுநீர் அமைப்பு மூலம் தண்ணீரும், உரமும் செல்வதால் தேவையற்ற உரம் விரயமாவது தடுக்கப்படுகிறது. பயிரின் வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி வளர்ச்சிக்கேற்ப உரம் தரப்படுவதால், நோய் மற்றும் பூச்சி எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் எதிர்ப்பு திறன் பெற்று கூடுதல் மகசூல் கிடைக்கவும் ஏதுவாகிறது. சாதாரண முறையில் உரமிடுவதால் 20 சதம் வரை விரையமாக அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இங்கு 95 சதம் வரை உரம் செடிக்கு நேரிடையாக சென்றடைகிறது.

இந்தமாதிரி புத்தகங்கள் படித்த விவசாயிகளின் வாழ்க்கை எப்படி விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் விவசாயியின் வாழ்க்கைக்கு ஒரு வளமான மாற்றத்தை கொண்டுவர முடியும் என்பதை விளக்குகிறது. அப்படி ஒரு மாற்றத்தை ஒரு புத்தகம் கொண்டுவரும் என்றால், அப்படிப்பட்ட புத்தகம் தான், அதைப்படிக்கும் ஒருவருக்கு அள்ள அள்ள குறையாத கற்பக விருட்சகமாக இருக்க முடியும்.

புத்தகம் நம் வாழ்வில் ஒவ்வொரு பகுதியிலும் இன்றியமையாததாக இருக்கிறது, நம்முடன் நம் வாழ்க்கப்பயணத்தில் நடந்து வருகிறது, இன்ப துன்பத்தில் பங்கு பெற்று, நம்பிக்கை விதையை விதைத்து, வாழ்வை செவ்வனே நடத்த நம்மை செம்மைப்படுத்துகிறது, நமது வாழ்க்கையை மேம்படுத்த அறிவையும், தொழில்நுட்பத்தையும் கொடுக்கிறது, வாழும் முறையை அனுபவத்தின் அடிப்படையில் சொல்லிக்கொடுக்கிறது, நமது கலாச்சாரத்தை, வரலாற்றை, அடுத்த அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்கிறது, சமூக பொருளாதார சித்தாந்தத்தை, வளர்ச்சிக்கான அரசியலை சொல்லிக்கொடுக்கிறது.

எவ்வளவு தூரம் கடந்திருக்கிறோம் என்பதில் நம் ஊக்கம் மலர்வதில்லை, இன்னும் எவ்வளவு தூரம் கடக்க இருக்கிறோம் என்கிற சிந்தனைதான் ஊக்கத்தை மலரச் செய்கிறது. நமக்கான வழிகளைப் புலரச் செய்கிறது. அந்த சிந்தனைகளை, வழிகளை நமக்கு புலப்படுத்தும் கருவிதான் புத்தகங்கள்.

இப்படி புத்தகத்தின் பயன்கள் கணக்கிலடங்கா. எனவே தினமும் புத்தகம் படிப்பது வாழ்வில் இன்றியமையாதது ஆகும். தற்காலிக சந்தோஷங்களுக்குத் தலை கொடு்த்து விடாமல் அபாரமான சாதனைகளை நிகழ்த்த முனைபவர்களால்தான் உலகின் வளர்ச்சி உவப்படைகிறது. உலகின் வளர்ச்சியில் உங்கள் பங்கு அவசியம்தானே, அபாரமான சாதனைகளுக்கு அச்சாரமிடுங்கள், புத்தகங்களை படிப்பதன் மூலம்.
நதிநீர் இணைப்பில் புத்தகம்.

சமீபத்தில் நான் படித்த இரண்டாவது புத்தகம், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சோம. இராமசாமி அவர்கள் எழுதிய செயற்கைக்கோள்களின் பார்வையில் தமிழக நதிகளியல் என்ற ஒரு அற்புதமான ஆய்வுக்கட்டுரையை மக்களுக்கு புரியும் விதத்தில் எளிமையாக புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

அதாவது அவர் சொல்கிறார், நதிகளை நாம் ஒரு நீர் வழங்கும் இயந்திரம் என்ற அளவிலேதான் பார்க்கிறோமேயொழிய நதிகளின் வாழ்க்கை வரலாறுகளைப் பற்றியும் அதன் இயங்கியல் பற்றியும் (River histories and Dynamics) அதனால் உள்ள பல்முனை நன்மைகளைப்பற்றியும் நாம் சிந்திப்பதே இல்லை.
நதிகளின் பிறப்பு, அவை ஒடும் விதம், அவற்றின் பாதைகளிலே ஏற்படும் மாற்றங்கள், மலைப்பகுதி, சமவெளிப்பகுதி மற்றும் கடலோரப்பகுதி ஆகியவற்றில் நிகழும் நதிகளின் செயல்பாடுகளை நாம் ஆராய்ந்து கணித்தோமேயானால், இந்நதிகள் நீர்வழங்கும் அமுத சுரபி மட்டும் அல்ல, அவை பூமியின் மேற்பரப்பியல் மற்றும் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள், பூமிக்கு கீழே நடைபெறும் புவியியல் மாற்றங்கள், கனிம வளம், பூமி நகரும் தன்மை மற்றும் பூகம்பம், கடலுக்கும் நதிகளுக்கும் இடையே நடைபெறும் செயல்பாடுகள், கடல்மட்ட மாறுதல்கள், கடந்த கால வெள்ளங்கள் மற்றும் எதிர்கால வெள்ளங்களின் கணிப்பு, காலநிலை மாற்றம், பண்டைய நாகரீகம், அணைகள், நீர்த்தேக்கங்கள் அமைக்க ஏதுவான இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய உண்மைகளையும் மற்றும் சான்றுகளையும் தன்னிடத்தே கொண்டுள்ளன என்பது புலனாகும்.

ஆகவே நதிகளின் வாழ்க்கையில் குறுக்கிடாமலும் அவற்றின் வளம் குன்றாமல் நதிகளின் வளத்தைப்பயன்படுத்தினால் நதிகளைப் பாதுகாப்பதோடு எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும் என்பதை மிகவும் அழகாக, செயற்கைக்கோள் படங்களின் மூலம் இன்னும் எவ்வளவு நாம் அறிந்து கொள்ளவேண்டும், நதிகளைப்பற்றி புரிந்து கொள்ளவேண்டும் என்பதை மிகவும் அருமையாக விளக்குகிறார்.

இதில் என்னைக்கவர்ந்த ஒரு பகுதி காவிரி ஆற்றைப்பற்றியது. அவரது எண்ணங்களின் படி செயற்கைக்கோள்கள் மூலம் காவிரி வடிநிலத்தில் வடதமிழ் நாட்டில் ஆராய்ந்தவை பல வியத்தகு உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

காவிரி ஆரம்பத்தில் கொகனேக்களில் இருந்து 8000 ஆண்டுகட்கு இடைப்பட்ட ஒரு காலக் கட்டத்தில் உருவாகி, 3000 ஆண்டுகட்டு முன்பு வரை ஒடியிருக்கிறது. மங்களூர்-பெங்களூர்-சென்னைப் பகுதியில் பூமி ஆர்ச் போன்று உயர ஆரம்பித்ததால் கொஞ்சம் கொஞ்சமாக 5 முறை தடம் மாறி தெற்கே நகர்ந்து தடம் மாறி ஒடியிருக்கிறது. பூமியின் உயர்வுக்கு ஈடு கொடுக்க முடியாததால் முதல் பாதையை விட்டு விட்டு இரண்டாம் பாதை ஆக மேற்கே மேட்டூர் நீர்த்தேக்கதிலிருந்து கிழக்கே கடலூர் வரை 2700-2300 ஆண்டுகள் காலகட்டத்தில் தற்காலப் பொன்னையாற்றின் பாதையில் ஒடி, கடலூரில் கடலில் கலந்திருக்கிறது.

கடலூர் பகுதியில் அலைகள், ஆழிப்பேரலைகள், பிற நதிகளால் வெள்ளம், பூமி கிழே செல்வதால் காவிரி பாதை 2ல் ஏற்பட்ட தடுமாற்றம், வடக்கு தெற்காக உருவாகி வரும் வெடிப்புகளின் தாக்கம் மற்றும் தெற்கிலிருந்து வளர்ந்து வந்த அமராவதியின் உபநதியின் கையகப்படுத்துதல் ஆகியவற்றால் பாதை 2ஐ முற்றிலுமாக விட்டு விட்டு பாதை 3ஆன திருச்சிராப்பள்ளி சமவெளியை அடைந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியில் 12 தடங்களில் தெற்கே புதுக்கோட்டையிலுருந்து வடக்கே, தற்கால கொள்ளிடத்திற்கு தெற்கே வரை இன்றிலிருந்து 2300 ஆண்டுகள் முதல் 900 ஆண்டுகள் வரை ஒடியிருக்கிறது.

ஆரம்பத்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக இப்போதைய வெள்ளாற்றில் தடம் 7 ஆக ஒடிய காவிரி கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே நகர்ந்து தற்கால அம்புலியாறு, அக்னியாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி ஆறு, பழம்காவிரி ஆகிய பல தடங்களின் வழியாக ஒடி பின்னர் கொள்ளிடத்தில் தடம் மாறி 750 ஆண்டுகட்கு முன்பு நிலை கொண்டுள்ளது.

இப்படி பாதை மாறும் பொழுது, வாழ்க்கை முறை மாறுகிறது, ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது, விவசாய முறையில் மாற்றம் வருகிறது, கலாச்சாரம் மாறுகிறது. அதைப்பற்றி படிக்கும் போது எப்படி நதிகள் நம் வாழ்க்கையில் ஒன்றியிருக்கிறது என்பது புரியும். அதன் தன்மைகளை புரிந்து கொண்டேமேயானால், நதிகளை இணைந்து, தமிழகத்திலேயே நீர்வழிச்சாலைகளை அமைத்து நாம் நம்மை வளப்படுத்திக்கொள்ளலாம்.

அடுத்த மாநிலத்தை நம்பி தமிழகம் இருக்க தேவையில்லை. வருடா வருடம் வெள்ளம்போல் ஒடும் காவிரிமூலம், வைகையையும், பாலாற்றையும், தாமிரபரணியையும் இணைந்து நீர்வழிச்சாலையை ஏற்படுத்தினால், வெள்ளத்தை தேக்கிவைக்கும் நீர்வழி அணையாக அது செயல் படும். அந்த நீரை தமிழகமே, வேண்டிய பகுதிக்கு திருப்ப முடியும். அதில் கிட்டத்தட்ட 100 டி.யெம்.சி நீரை வருடாவருடம் தேக்கிவைக்க முடியும். அப்படி தேக்கி வைக்கும் பட்சத்தில், வரண்ட தமிழகம் வருடம் தோறும் வளமான தமிழகமாக கண்டிப்பாக மாறும்.

அப்படிப்பட்ட ஒரு தொலை நோக்கு திட்டத்தை, கண்டிப்பாக செய்ய முடியும். அப்படி செய்ய முடியும் என்ற மனப்பான்மை கொண்ட தலைமையாலும், அதை செயல்படுத்த கூடிய இளைஞர்களை கொண்ட தமிழக தொழில் நுட்ப வல்லுனர்களைக்கொண்டு, சாதிக்க முடியும் என்ற எண்ணம் கொண்ட தமிழக அரசு அதிகாரிகளைக்கொண்டும், ஒரு Public Private Partnership உடனும், உலக வங்கியின் உதவியுடனும், மத்திய அரசின் உதவியுடனும், தமிழக அரசு செயல் படுத்த நினைத்தால் தமிழகம் கண்டிப்பாக என்றைக்கும் வற்றாத வளமான நாடாக மாறும் என்பது திண்ணம்.

அப்படிப்பட்ட ஒரு வளமான தமிழகத்தை 2020க்குள் கண்டிப்பாக நான் காண்பேன் என்ற கனவு எனக்கு இருக்கிறது. அதே கனவு தமிழக மக்களுக்கும், தமிழக அரசிற்கும், தமிழக அரசியல் கட்சிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், தொழில் நுட்ப வல்லுனர்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன். அந்த கனவு, கனவு நினவாகும் வரை அவர்களை தூங்கவிடாது. எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்லுங்கள் பார்ப்போம்.

உறக்கத்தில் வருவதல்ல கனவு
என்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு
கனவு காணுவோம், கனவு காணுவோம், கனவு காணுவோம்
தடைகளை தகர்ப்போம், தடைகளை தகர்ப்போம்,
தமிழக நதிகளை இணைப்போம், தமிழக நதிகளை இணைப்போம்,
நீர்வழிச்சாலை உருவாக்குவோம், நீர்வழிச்சாலை உருவாக்குவோம்,
தமிழகத்தை வளமான மாநிலமாக்குவோம்.

எனவே நண்பர்களே, புத்தகம் படிப்பது எவ்வளவு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது, என்பதை பாருங்கள். நண்பர்களே, கடந்த 10 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 12 மில்லியன் (1.2 கோடி) இளைஞர்களை சந்தித்து உரையாடியிருக்கிறேன். இந்த பூமிக்கு கிழே, பூமியின் மேலே, வானத்திலே இருக்ககூடிய எவ்வித வளத்தைக்காட்டிலும், சக்தியைக்காட்டிலும், இளைஞர்களின் எழுச்சி உண்டாக்கப்பட்ட மனம் மிகவும் சக்திவாய்ந்தது ஆகும். எனவே, இளைஞர்களின் சக்தி, அவர்களது ஆர்வம், அனுபவம் கொண்ட தலைவர்களுக்கு நம்பிக்கையுடன் ஒரு தொலைநோக்கு திட்டத்தை தீட்டி, அந்த இளைஞர்களை கொண்டு செயல் படுத்த வாய்ப்பைக் கொடுக்கும். அது நமது வருங்கால சந்ததிகளுக்கு, தலைமுறை, தலைமுறையாக, வம்சாவம்சமாக பெருமைப்பட வைக்கும் பரம்பரை சொத்தாக உருவாகும் என்பது நிச்சயம்.
உலகத்திலே மிகப்பெரிய சாதனையாளர்களை, பெரிய மனிதர்களைப்பற்றி படித்து வளர்ந்த குழந்தைகளின் கற்கும் திறனை பற்றி அறிந்த போது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும், வியப்பாகவும், மற்றும் அகத்தூண்டுதலாகவும் இருந்தது. அப்படிப்பட்ட புத்தகங்களை படித்து அகத்தூண்டுதல் பெற்ற குழந்தைகள் கேட்கும் கேள்விகள் எண்ணங்களை எழுச்சியூட்டுவதாக இருக்கும். அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளின் கேள்விகள், கற்பனைத்திறத்துடன் இருக்கும், அதற்கு பதில் சொல்வது மிகவும் முக்கியம். இளைஞர்களின் உற்ற நண்பன் அருமையான புத்தகங்கள்தான். எனவே

1. நகரங்களில் கிடைக்கும் நூல் நிலைய வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும். அனைத்து வகையான மற்றும் பழமையான புத்தகங்களை கணிணியாக்கம் செய்து கிராமத்திற்கும் இணையதளத்தின் மூலம் கிடைக்கும் வகையில் செய்யவேண்டும். 2. இளைஞர்கள் கற்பனைத்திறனுடன் கூடிய தனித்தன்மை பெற்றவர்கள். எனவே இளைஞர்களின் கற்பனைத்திறனையும், அறிவாற்றலையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கும் வகையிலான தரமான புத்தகங்கள் அதிகம் வரவேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்கள் மூலம் முறை சார்ந்த மற்றும் முறைசார கல்வி முறையிலும் பயிற்றுவிக்கபட வேண்டும்.

3. இளைஞர்கள் தங்களது சுற்றுப்புறத்திலிருந்தும், தங்கள் குடும்பத்தார்களிடம் இருந்தும், அவர்கள் தினமும் பழகி வளர்ந்து வாழும் பக்கத்து ஊர்களில் இருந்தும் பலவற்றை கற்றுக்கொள்கிறார்கள். எடுத்துக்காட்டாக தங்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் நல்ல புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை பார்த்தால், அவர்களுக்கும் தினமும் நல்ல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வரும். அப்படி படித்த புத்தகங்களைப்பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் விவாதிக்கும் பொழுது, அவர்களுக்கு புத்தகம் படிப்பதில் மிகவும் ஆர்வம் உருவாகும்.

4. தனித்திறமைகளை வளர்க்கும் சூழலில், நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொள்ளும் சூழலில், விளையாட்டை போற்றி வளர்க்கும் சூழலில், சுற்று சூழல் மற்றும் சமூக பொறுப்புணர்வு கொண்ட சூழலில், குடும்பத்தை பேணும் சூழலில், மனவளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சி அடையும் சூழலில் இளைஞர்கள் வளர்க்கப்பட வேண்டும், உருவாக்கப்படவேண்டும்.

5. இளைஞர்களிடம் கேள்வி கேட்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும். அவர்களது மனம் திறக்கப்படும்படியாகவும், அவர்களது சிந்தனையை தட்டி வளர்க்கும் விதத்திலும், கேள்விகளுக்கு பொறுமையுடனும், அறிவுத்திறனுடனும் பதில் அளிக்கப்பட வேண்டும். மனம் திறந்தால் மட்டும் போதாது, அவர்களது குணம் வளர்ச்சி அடையவேண்டும். அதாவது மனமாற்றம் அல்ல இங்கு முக்கியம், குணம் மாறவேண்டும். அப்போது தான் அறிவார்ந்த மேன்மையான நிலைக்கு இளைஞர்களை இட்டுச் செல்ல இயலும்.

இவை அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும், நல்ல அருமையான புத்தகங்கள் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட திறன் கொண்ட புத்தகங்களை பதிப்பாளர்கள் ஊக்குவிக்க வேண்டும், உருவாக்க துணை நிற்க வேண்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தினமும் படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே நண்பர்களே, நான் சொல்வதை திருப்பி சொல்வீர்களா.

அருமையான புத்தகங்கள் கற்பனைத்திறனை ஊக்குவிக்கும்
கற்பனைத்திறன் படைப்பாற்றலை உருவாக்கும்
படைப்பாற்றல் சிந்திக்கும் திறனை வளர்க்கும்
சிந்தனை திறன் அறிவை வளர்க்கும்
அறிவு உன்னை மகானாக்கும்.

எனவே புத்தகங்களை படைக்கும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள் இப்படிப்பட்ட திறன்களை இளைஞர்கள் மத்தியில் வளர்க்கும் விதமாக தங்களது படைப்புகளை கற்பனைத்திறத்தோடு, காட்சி அமைப்புகளோடு படைக்க வேண்டும். ஒவ்வொரு நூலகங்களும், இப்படி பட்ட திறத்தோடு படைக்கப்படும் நூல்களை அதிகமாக வாங்க வேண்டும். அதாவது காஷ்மீரில் இருக்கும் இளைஞர்கள் கன்னியாகுமரியைப்பற்றி படிக்கவும், இராமேஸ்வரத்தின் இளைஞர்கள், ஜார்கென்டைப்பற்றி படித்து அறிந்து கொள்ள நல்ல புத்தகங்கள் உறுதுணையாக இருக்கும். அதாவது பல்வேறு நாடுகளைச்சேர்ந்த இளைஞர்கள் ஒன்றாக கூடும் போது அவர்கள் ஒவ்வொரும் அடுத்தவர்களது நாடு, கலாச்சாரம், வரலாறு, பற்றி அறிந்து கொள்ளவும் அது மிகவும் உதவுகிறது என்பதை நான் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களை ஒட்டு மொத்தமாக சந்தித்து பல தடவை உரையாடும் போது உணர்ந்தேன். அப்படிப்பட்ட சூழ் நிலையில் இளஞர்களுக்கான உலகளாவிய கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
படிப்பதின் அவசியம்.

நல்ல புத்தகங்களோடு தொடர்பு வைத்திருப்பதும், அதை வாங்கி படிப்பதும் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு செயலாகும். புத்தகம் நமக்கு நீடித்த ஒரு நிலையான, தொடர்ந்த நண்பனாகும். சில நேரங்களில் அப்படிப்பட்ட புத்தகங்கள் நமக்கு முன்பே பிறந்ததாகும், நமது வாழ்க்கைப்பயணத்தில் அது நம்முடன் கூடவே வரும், அது மட்டுமல்ல தலைமுறை தலைமுறையாக அது நம் அடுத்த தலைமுறையோடும் தொடர்ந்து வரும். எனது இளமைக்காலத்தில் சென்னை மூர் மார்க்கெட்டில் நான் ஒரு புத்தகம் வாங்கினேன். அதன் பெயர் "Light from many lamps", அதை "Watson Lillian Eichler" என்பவர் எழுதியிருந்தார்.

அதாவது கடந்த 50 ஆண்டுகளாக அது எனக்கு உற்ற தோழனாக இருந்து வருகிறது. அந்த புத்தகத்தை திரும்ப திரும்ப படித்ததினால் அதை பல தடவைகள் பைண்ட் பண்ண வேண்டியதாகிவிட்டது. எப்பொழுதெல்லாம் கஷ்டமான, துன்பமான சூழ்நிலை நிலவுகிறதோ, அப்பொழுதெல்லாம் அந்த புத்தகம் அரும்பெரும் மனிதர்களின் எண்ணங்களை கொண்டு கண்ணீரை அது துடைக்கிறது. எப்பொழுதெல்லாம் அளவில்லா மகிழ்ச்சி நம்மை ஆட்கொள்கிறதோ, அப்பொழுதெல்லாம் அது மனதை ஒரு நிலைப்படுத்தி, சமன்படுத்தி எண்ணத்தை வரைமுறைப்படுத்துகிறது.

இன்னுமொரு முக்கியமான புத்தகம் என் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், எப்பொழுதும் அது தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது என்றால் அது 2200 வருடங்களுக்கு முன்பு திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள்தான். குறிப்பாக குறுகத்தரித்த அந்த குறள் எனக்கு ஒரு அகத்தூண்டுதலாக அமைந்தது. கல்வியின் பால் ஈர்ப்பை ஏற்படுத்திய எனது அம்மா எனக்கு கற்றுக்கொடுத்த ஒரு குறளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அதாவது அறிவை பெற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப்பற்றிய ஒரு குறளாக அது அமைந்தது. அதாவது

அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும்
உளழிக்கல் ஆகா அரண்.

அதாவது அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவியாகும். மேலும் பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணும் (கோட்டை) ஆகும். எத்தகைய சூல்நிலையிலும் அறன் போல் அதாவது கோட்டை போல் நின்று நம்மை காக்கும் என்பதாகும். அறிவும், அறிவைப்பெறுவதும் மனித குலத்தின் ஒரு அரும்பெரும் சொத்தாகும்.

புத்தகம் நமது பழைய காலத்தை நினைத்துப்பார்த்து, நிகழ்காலத்தின் அனுபவம் கொண்டு, எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு சக்தியாக விளங்குகிறது. நாம் வரலாற்றையும், பூகோளத்தையும், கலாச்சாரத்தையும், கலையையும், அறிவியலையும், தொழில் நுட்பத்தையும், நல்ல புத்தகங்களின் மூலம் படித்து, கற்று தேர்ந்தால் தான், நாம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாறமுடியும்.

எவ்வளவு வேலைப்பளு இருந்தாலும், தொலைக்காட்சிகள் நேரத்தை எடுத்துக்கொண்டாலும், மாணவர்களுக்கு வீட்டுப்பாடம், எழுத்து, படிப்பு அதிகமாக இருந்தாலும், நாம் தினமும் ஒரு அரை மணிநேரமாவது ஒதுக்கி படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
புத்தகமும் சிறு வயதில் அரும்பெரும் எண்ணங்களும்

பிறரைக் குறித்து மட்டுமே ஆராய்பவர் சாதாரண மனிதர். கல்வி கற்றிருந்தாலும் தன்னையும் நன்கு அறிபவரே கல்விமான்...... ஒவ்வொருவரும் கல்விமானாக முயல வேண்டும். கல்வியின் நோக்கம் மதிப்பெண்களையும், வேலை வாய்ப்பையும் அடிப்படையாகக் கொண்டதல்ல. அதன் உண்மையான நோக்கம்....... உளப்பூர்வ விவேகத்தினூடே ஒரு நல்ல மனிதனை உருவாக்குவதே.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களது வாழ்க்கையின் இரண்டாவது அதிசயம் என்று எதைச் சொல்கிறார் என்று தெரியுமா உங்களுக்கு. அதாவது, அவரது தனது 9வது வயதில் Magnetism பற்றி அவர் கற்றுக்கொண்டது தான் அவரது வாழ்வின் முதல் அதிசயம். ஐன்ஸ்டீனின் அப்பா அவருக்கு ஒரு காம்பஸ்ஸை தரும் வரை நகரும் ஒரு பொருளை நகர்த்துவது வேறு ஒரு கண்ணுக்கு தெரியாத சக்தி என்று தான் நினைத்திருந்தாராம். தனது 12 வது வயதில் அவரது ஆசிரியர் ஒரு புத்தகம் கொடுத்தார்.

அந்த புத்தகம் தான் Max Talmud எழுதிய Euclidean Plain Geometry என்ற புத்தகமாகும். அந்த புத்தகத்தை அவர் "Holy Geometry Book" என்று சொல்லுவார். அந்த புத்தகத்தை படித்தது தான் ஐன்ஸ்டீனின் வாழ்வில் நிகழ்ந்த இரண்டாவது அதிசயம் என்று கூறுகிறார். உண்மையான அர்த்தத்தை நோக்கி, அதனுடன் ஐன்ஸ்டீன் கலந்து விட்டார். மிகப்பெரிய ஆய்வுக்கூடமோ, உபகரணங்களோ இல்லாத சூழ்நிலையிலும், அவர் தனது உள் மனதின் எண்ணத்தின் சக்தியை கொண்டே, உலகலாவிய உண்மையை கண்டுணர்ந்தார்.

கணித்ததின் கடினமான விடை தெரியாத புதிர்கள் தான் ஐன்ஸ்டீனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்தது. அத்தனை சாதனைகளையும் அவர் சாதிப்பதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது புத்தகங்கள் தான். எனவே நண்பர்களே, புதுமை என்பது உலகின் இயல்பில் பயணிப்பவர்களால் உருப்பெறுவதில்லை. உலகின் சராசரி போக்கிலிருந்து முரண்பட்டு தனித்து சிந்திப்பவர்களே புதுமையைப் புஷ்பிக்கிறார்கள்.

ஸ்ரீநிவாச இராமானுஜம் அவர்கள் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கணித மேதை, அவருக்கு இயற்கையாகவே கணித்தில் திறமை வாய்க்கப்பெற்றிருந்தார். அவரது 13வது வயதில் அவர் S.L. Loney எழுதிய Advanced Trigonometry என்ற புத்தகத்தை முழுவதும் படித்து முடித்து, தானே தியரங்களும், அல்காரிதங்களும் படைத்தார்.

பள்ளியில் யாருக்கும் இல்லாத வகையில் கணிதத்தில் தனித்துவம் பெற்று விளங்கினார். கணிதத்தை தவிர அனைத்து பாடங்களிலும் அவர் தோல்வியடைந்தார். அதாவது நண்பர்களே, நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன?

எதிர்பாராத விஷயங்களை எதிர்பார்க்கக் கற்றுக் கொள்வதுதான் உங்களை இன்னும் ஒரு படி மேலே உயர்த்தும். சற்றும் எதிர்பார்த்திராத விஷயங்கள் எதிர்படுவதே எதார்த்தம்.

வெற்றி என்பது இறுதிப்புள்ளி.....
தோல்விகள் என்பவை இடைப்புள்ளிகள்....
இடைப்புள்ளிகளின் துணையின்றி
இறுதிப்புள்ளியை அடைதல் சாத்தியமில்ல....

வெற்றியைக் கொண்டாட மறந்தாலும், தோல்விகளைக் கொண்டாட கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில், தோல்விகள்தான் நம்மை வலுப்பெறச் செய்பவை. நம் பயணத்தை முழுப் பெறச்செய்பவை. எனவே நண்பர்களே, திருவள்ளுவர் சொன்னார்.....

இடும்பைக்கு இடும்பை படுப்பர், இடும்பைக்கு
இடும்பை படா தவர்.

எனவே தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து, வெற்றி பெற்றதினால் தான், அப்படிப்பட்ட ஒரு தனித்திறமை அவருக்கு கணிதத்தில் கிட்டியது. அந்த திறமை அவருக்கு புத்தகம் படித்ததினால் மெருகேற்றப்பட்டு பட்டை தீட்டிய வைரமாக விளங்கியது. இன்றைக்கும் அவரது எண் கணிதம், அறிவியலை, தொழில் நுட்பத்தை செம்மைப்படுத்திக்கொண்டு இருக்கிறது.

எனவே பெற்றோர்களும், ஆசிரியர்களும், இந்த சம்பவங்களில் இருந்து கற்றுக்கொள்வது என்னவென்றால், உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு நல்ல செயல்களையோ, சாதனைகளையோ செய்தார்கள் என்றால் அவர்களுக்கு நீங்கள் பரிசளிப்பது புத்தகமாகத்தான் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டும்.

நான்கு திசைகளின் குறிப்பிட்ட புள்ளிகளுக்குள் அடைந்து போனவையல்ல உங்களின் எல்லைகள்.... எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும். இது சத்தியம்....... எவ்வளவு தொலைவும் உங்களால் பயணிக்க இயலும். அந்த நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.
முடிவுரை

வாழ்வில் நீங்கள் எப்படி இருக்க விரும்புகிறீர்களோ, அப்படி உங்களை அமைத்துக் கொள்ள, அதற்கான வாய்ப்புகளை புத்தகம் படிப்பதன் மூலம் உருவாக்க வேண்டும். உங்களுக்கான வாய்ப்புகள் தானாக உருப்பெறாது.... நீங்கள்தான் உருவாக்க வேண்டும். எதுவாயினும் மனம் ஒன்றிச் செயல்படுங்கள். எழுதுவதோ, படிப்பதோ, தேநீர் அருந்துவதோ, பயணிப்பதோ --- எதுவாயினும், மனம் ஒன்றிச்செயல்படுங்கள். மனம் ஒன்றிச் செய்கின்ற செயலின் பலன் எதிர்மறையாய் இராது. உற்சாகம் தானாக ஊற்றெடுக்காது. ஒரு புத்தகத்திலிருந்தோ, ஒரு கவிதையின் வார்த்தைகளில் இருந்தோ, ஒரு தோற்றத்திலிருந்தோ அது உங்களுக்குள் உவப்புடன் மலரும். எனவே நூல்கள் வாசிப்பதையும், இயற்கையை நேசிப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

எனவே நண்பர்களை, இந்த 35வது சென்னை புத்தகத் திருவிழா, உங்களுக்கு இந்த சிறப்புகள் அனைத்தையும் வழங்கும் அறிவுக்களஞ்சியமாக திகழ்ந்திருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த புத்தகத் திருவிழாவிலே பங்கேற்கும் அனைவருக்கும், பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் எனது செய்தி என்னவென்றால் -

நீங்கள் ஓவ்வொருவரும் தினமும் ஓரு மணி நேரம் நல்ல புத்தகங்கள் படிக்க ஓதுக்குவீர்களானால் சில வருடங்களுக்குள் நீங்கள் ஓர் அறிவுக்களஞ்சியமாவீர்கள். புத்தகம் என்றென்றும் உங்களுக்கு ஓர் உற்ற நன்பனாக திகழும். உங்கள் ஓவ்வொருவரது வீட்டிலும், ஓர் நூல் நிலையம் அவசியம் இருக்க வேண்டும். செய்வீர்களா. இந்த ஓர் சிரிய முயற்சி நாட்டில் ஓர் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் முதற்படியாகும்.

அந்த முயற்சிக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுக்க வேண்டியது இங்கு கூடியிருக்கும் ஆன்றோர்கள், சான்றோர்கள், பொதுமக்களாகிய உங்களின் முதற்பணியாக இருக்க வேண்டும்.

இந்த 35வது சென்னை புத்தகத் திருவிழா வெற்றியடைய வாழ்த்துகிறேன். உங்களுக்கு என் வாழ்த்துகள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக....

3 comments:

Rathnavel said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

VANJOOR said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்


1.
காணத்தவறாதீர்கள். உலகிலேயே மிக பெரிய, மிக சிறிய திருகுரான் பிரதிகளின் அரிய சிறுகண்காட்சி விடியோக்கள் .
மழலைகள், சிறார்கள் குரான் ஓதும் விடியோக்கள்.


.

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

2. ---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
< ----

VANJOOR said...

சொடுக்கி கேளுங்க‌ள்

>>>>>
பிரமிப்பூட்டும் நேர் விவாதம். குர்ஆனா? பைபிளா? எதுஉண்மையான‌து? எது இறைவனின் வார்த்தைகள்? கிறிஸ்தவ அறிஞர் Dr.William Campbell X Dr. Zakir Naik.

இறைவ‌னின் வார்த்தைக‌ளில் அசிங்கமோ, அபத்தமோ, விஞ்ஞான முரண்பாடுகளோ இருக்க முடியாது. யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தும் நோக்கம் இல்லை
அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய விடியோக்கள்.
. <<<<<

.

Post a Comment