Labels

Wednesday, October 26, 2011

ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்கப்படுமா?

மருத்துவமனையின் நுழைவாயில்
 
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சென்ட்ரல் ராஜிவ்காந்தி மருத்துவமனைக்கு அடுத்தபடியாக 1,200 படுக்கைகளைக் கொண்ட சென்னையின்  மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். வடசென்னை மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.

மழை நீர் தேங்கிய நிலையில் நோயாளி ஒருவரை
அவர்களது உறவினர்கள் இடமாற்றம் செய்கின்றனர்

அனைத்து நவீன மருத்துவ சிகிச்சைகள் இலவசமாக அளிக்க வேண்டும் என்பது தான் அரசு மருத்துவமனைகளின் நோக்கம். ஆனால் ஸ்டான்லி மருத்துவமனையில் சிடி ஸ்கேனும், இருதய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்ககூடிய ஆஞ்சியோகிராம் கருவியும் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. அத்தருணங்களில் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று ஸ்கேன் எடுப்பதற்கும் ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்காகவும் செல்ல வேண்டியுள்ளது. பாமர மக்களால் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வழியில்லாமல் தான் அரசு மருத்துவமனையை நோக்கி வருகின்றனர். அவர்களை தனியார் மருத்துவமனைகளுக்கெ திரும்ப அனுப்பி வைப்பது என்பது ஈவிரக்கமற்ற செயல்.
மருத்துவக் கோப்புகளை
கார் பார்கிங்கில் சரி பார்க்கும் அலுவலக ஊழியர்கள்

தண்ணீர் தேங்கிய நிலையில் வரவேற்பு நாற்காலிகள்

லிப்ட்கள் (மின் தூக்கிகள்) பராமரிபின்மை, ஆக்சிஜன் பற்றாக்குறை, கழிவறைகள் சுகாதாரமற்று இருப்பது, மழைக்காலங்களில் தண்ணீரை தேங்க விட்டு கொசுக்களை வளர்த்தெடுப்பது என மருத்துவமனையின் சாதனை (!) பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. இவற்றுக்கெல்லாம் மேலாக மருத்துவர்கள், செவிலியர் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையும் உள்ளதால் நோயாளிகளின் நிலையை பற்றி விரிவாக விளக்கத் தேவையில்லை.
கேட்பாரற்று கிடக்கும் ஒரு நோயாளி
200 ஆண்டுகள் பழமையான ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியில் இருந்து அவசர சிகிச்சை வசதிகள் வரையிலும் சீர்கெட்டு போயிருப்பதாகவும்  குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்து தரவேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநகராட்சி நிர்வாகமும், தமிழக அரசும் போர்கால அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
பார்வையாளர்கள் அமரும் நிழற்குடைகளில் ஒன்று

1 comment:

கோகுல் said...

வலைச்சரம் மூலமாக உங்கள் பதிவுக்கு வருகிறேன்.ஒரு நல்ல சமூகம் அமைவதற்கான தேடல் உங்கள் பதிவுகளில் தெரிகிறது.தொடருங்கள்.

Post a Comment