Labels

Saturday, September 24, 2011

சேப்பாக்கம் கிரிக்கெட் - தித்திப்பான திருப்பங்கள்

எம்.ஏ. சிதம்பரம் மைதானம்-சேப்பாக்கம்

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் 1997 மே மாதம் 21 அன்று பகல் இரவு ஒருநாள் கிரிக்கெட் போட்டி. இந்தியாவிற்கெதிராக முதலில் ஆட்டத்தை துவங்கியது பாகிஸ்தான். பாகிஸ்தானில் துவக்க ஆட்டக்காரர் சகித் அன்வர் 146 பந்துகளில் 194 ரன்கள் எடுத்தன் மூலம் 1984ல் விவ் ரிச்சர்ட்ஸ் இங்கிலாந்துக்கு எதிராக அவுட்டாகாமல் 189 ரன்கள் சாதனையை முறியடித்து, ஒருநாள் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிகப்பட்ச ரன்கள் எடுத்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் கைதட்டல் மூலம் அந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்தனர். அந்த ஆட்டத்தையும், பாகிஸ்தான் அணிக்கு கிடைத்த பாராட்டுகளை நாம் மறந்தாலும் கூட பாகிஸ்தான் அணி மறக்காது. சகித் அன்வரின் சாதனையை சச்சின் டெண்டுல்கர் கடந்தாண்டு முறியடித்தார்.

சகித் அன்வர் 194


வீரேந்திர சேவாக்.
டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் அதிகப்பட்ச ரன்கள் எடுத்த இந்தியர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர் வீரேந்திர சேவாக். தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 2008 மார்ச் 29 நான்காம் நாள் ஆட்டத்தில் 319 ரன்கள் எடுத்தன் மூலம் இந்த சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த ஆட்டம் நடைபெற்றதும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தான்.
 
1934ல் முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் இங்கு நடைபெற்றது. அப்போது மதராஸ் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக இருந்தவர் டேனியல் ரிச்மண்ட். நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை இல்லாமல் யாரையும் மைதானத்திற்குள் அனுமதிக்க கூடாது என்ற கடுமையான உத்திரவை பிறப்பித்திருந்தார் ரிச்மண்ட். இந்த முறை தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் பின்பற்றப்பட்டது. ஒருமுறை ரிச்மண்ட் அடையாள அட்டையை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டு மைதானத்திற்கு வருகின்றார். வாயில் காப்பாளனோ அடையாள அட்டை இல்லாததால் ரிச்மண்டை உள்ளே அனுமதிக்கவில்லை. தான்தான் மதராஸ் கிரிக்கெட் கிளப்பின் தலைவர் என்று எடுத்துக்கூறியும் ரிச்மண்டை உள்ளே அனுமதிக்கவில்லை. பின்னர் வீட்டிற்கு திரும்பிச் சென்று ரிச்மண்ட் அடையாள அட்டையை காட்டிய பின்னர்தான் மைதானத்திற்குள்ளேயே அனுமதிக்கப் பட்டாராம். வாயில் காப்பாளனுக்கு அன்று இரண்டு பாட்டில் பியர்களை ரிச்மண்ட் பரிசளித்தார் என்பது உபரித் தகவல்.


 இதுவரை 2000த்திற்கும் மேற்பட்ட டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இரண்டே இரண்டு ஆட்டங்கள் தான் 'டை'யில் முடிவடைந்தது. முதலாவது ஆட்டம் 1960 வருடம் டிசம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா-மேற்கிந்திய தீவுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி டையில் முடிவடைந்தது. மற்றுமொரு போட்டி சென்னையில் 1986 செப்டம்பர் 22 அன்று நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான டெஸ்ட் ஆட்டத்தின் கடைசி நாள் ஆட்டத்தில் ஒரு பந்து மீதமிருக்கையில் கிரேக் மேத்யூஸ்  மனீந்தர் சிங் விக்கெட்டை கைப்பற்ற ஆட்டம் டையில் முடிவடைந்தது.

மனீந்தர் சிங்
சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாத சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இப்போது எல்லாம் 20க்கு 20 ஓவர் கிரிக்கெட் ஆட்டங்கள் தான் அதிகம் நடைபெறுகின்றது சுவாரஸ்யங்கள் இல்லாமல்.

1 comment:

ஊரான் said...

கிரிக்கெட் விளையாட்டில் இந்தியனின் மன நிலை.
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html
http://hooraan.blogspot.com/2011/04/blog-post.html

Post a Comment