Labels

Thursday, September 22, 2011

பர்மா பஜார் ; உலக சினிமாக்கள் விற்பனைக்கு

 
பர்மா பஜாரை பெருமளவில் ஆக்கிரமித்திருப்பவர்கள் டி.வி.டி விற்பனையாளர்கள் தான். இதில் உலக சினிமாக்களை மட்டும் விற்பனை செய்பவர்களில் கார்த்திக்கும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒருவர். கடந்த 10 ஆண்டுகளாக பர்மா பஜாரில் சி.டி, டி.வி.டிகளை விற்பனை செய்து வருகின்றார். நேர்காணல் என்றதும் முதலில் மறுத்தவர், புகைப்படம் இல்லாமல் பதிவு செய்து கொள்ள ஒத்துக் கொண்டார்.


துவக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத் திரைப்படங்களை  விற்பனை செய்து வந்த கார்த்திக் பின்னர் உலக சினிமாக்கள் மீது ஆர்வம் ஏற்பட்டு அதனை விற்பனை செய்ய துவங்கினாராம். ‘ஆரம்பத்தில் உலக சினிமாக்கள் கையிருப்புகள் மிகவும் குறைவாகத்தான் எங்களிடம் இருக்கும். இன்று இணையம் வந்த பிறகு உலக சினிமாக்களை மட்டுமே விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது’என்றார்.

பொதுவாக உலக சினிமாக்களை வாங்குவதற்கு விசுவல் கம்யூனிகேசன் படிப்பவர்கள், திரைப்படக் கல்லூரியில் பயில்பவர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் தான் அதிக ஆர்வம் காட்டுகின்றார்கள். ஈரான், பிரெஞ்ச், ஜப்பான், கொரியன், லத்தீன் ஆகிய வெளிநாட்டுப் படங்கள் அதிகம் விற்பனையும் ஆகின்றன.

தமிழ் மற்றும் இந்திய மொழியில் எடுக்கப்படும் ஆவண மற்றும் குறும்படங்களின் விற்பனை பற்றி கேட்டதற்கு ‘இல்லை அவற்றை யாரும் வந்து என்னிடம் கேட்பதும் இல்லை நான் விற்பதும் இல்லை’ என்றார்.

உலக சினிமாக்ளை தவிர தியாகராஜ பாகவேதர், சந்திரபாபு, டி.எம். சௌந்திர ராஜன், சுசிலா, ஹிந்தியில் முகம்மது ரஃபி, கிஷோர் குமார், லதா மங்கேஸ்கர் ஆகியோர் பழைய படப்பாடல்களையும் பொதுவாக வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இது தவிர சீசனுக்கு ஏற்றபடி ஐயப்பன் பாடல்களை இருக்கா என்றும் கேட்பார்கள். சிறுவர்கள் கார்டூன், கேம்ஸ் மற்றும் WWF விளையாட்டு டி.வி.டிக்களை அதிகம் வாங்கி செல்வார்களாம்.

இறுதியாக ‘உலக சினிமாக்களை நான் விரும்பி பார்ப்பேன். அவற்றின் மீது ஏற்பட்ட காதல் தான்  அவற்றை விற்பனை செய்ய தூண்டியது. இதில் பெரும் லாபம் எல்லாம் சம்பாதித்து விட முடியாது. டி.வி.டிக்கு பத்து ரூபாய் கிடைத்தால் போதும். உலக சினிமாக்களை விற்பதில் நான் திருப்தி அடைகின்றேன். இதன் மூலம் நல்ல நண்பர்கள் கிடைத்துள்ளார்கள், என்றார் கார்த்திக்.

-------------
சென்னை ராஜாஜி சாலையில் பாரிமுனையில் ஆரம்பித்து கடற்கரை ரயில்நிலையம் வரை மூன்றுக்கு மூன்று அளவில் அமைந்த நூற்றுக்கணக்கான கடைகளின் தொகுப்பான பர்மா பஜார், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியவர்களால் நடத்தப்படுகின்றது. ஆடம்பரப் பொருட்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்வதில் பர்மா பஜார் சென்னையில் முன்னிலையில் உள்ளது.
-------------
பர்மா பஜாரில் புதிதாக நுழைபவராக நீங்கள் இருந்தால் “டி.வி.டி 15 ரூபாய் சார், ட்ரிபிள் எக்ஸ் வேண்டுமா, புதுப்படம் பார்கிறீங்களா?” என்று கையை வலுக்கட்டாயமாக பிடித்தது கட்டாயமாக கேட்டபார்கள். விருப்பம் இருந்தால் நீங்கள் வாங்கலாம் இல்லையேல் கையை உதறிவிட்டு நகரலாம்.

சந்திப்பு: ராமேஸ்வரம் ராஃபி

No comments:

Post a Comment